ஹாலிவுட் நடிகர் ராக் இந்து மதத்திற்கு மாறியதாக தவறாகப் பரப்பப்படும் AI படங்கள் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
ஹாலிவுட் நடிகரும், முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரருமான தி ராக் சனாதன தர்மத்தை ஏற்று இந்துமதத்திற்கு மாறிவிட்டதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சனாதன தர்மத்தை தழுவினார் ஹாலிவுட் நடிகர் ராக்!
டேய் திருமாவளவா! கேட்டுச்சா டா? @thirumaofficial pic.twitter.com/Yg4uR040gm
— K.முத்துராமன் பிள்ளை 🇮🇳 (@Its_Muthu_Rss) May 28, 2023
சுதந்திரமான மதம் #இந்துமதம்…
எனக்கு எந்த விதமான.
கட்டுபாடும் விதிக்காத மதம்#இந்துமதம்.தான்…….என்று.ஹாலிவுட் நடிகர்..ராக் பேட்டி pic.twitter.com/rMlagAsL5Z— மணிகண்டன் முதலியார் ⛳⛳⛳🇮🇳 (@W667DAf8eiSdq8L) May 28, 2023
இப்படங்களில் ராக் தனது தோளில் காவித் துண்டு, ருத்ராட்சை மாலை மற்றும் நெற்றியில் பொட்டு, கையில் விளக்குடன் நிற்கிறார்.
உண்மை என்ன ?
இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் படத்தில் உள்ள நடிகர் ராக்கின் உண்மையான பெயர் டுவைன் ஜான்சன் (Dwayne Johnson). அவரது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் அப்படி எந்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிடவில்லை.
இதனைத் தொடர்ந்து இப்படங்கள் AI (Artificial intelligence) உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து Optic, Hugging Face போன்ற இணையதளங்களில் ஆய்வு செய்தோம். Optic தளத்தில் இப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும், Hugging Face தளத்தில் இப்படம் 64 சதவீதம் செயற்கையானது என்றும் பதில் அளித்தது.
மேற்கொண்டு அப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். கோபால் கோஸ்வாமி என்னும் டிவிட்டர் பக்கத்தில் ராக் கையில் விளக்குடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், பிரபல ஹெவிவெயிட் மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான டுவைன் ஜான்சன், இந்து பாரம்பரியமான ஆரத்தி எடுத்துள்ளார் எனக் பதிவிட்டுள்ளார்.
This beutiful potrait is made with the help of AI by @bhargav_valera , thanks for sharing
— Gopal Goswami (@igopalgoswami) May 28, 2023
மேலும் அவரது பதிவில், இதனை AI உருவாக்கினால் என்ன செய்வது? அவர் இந்த உடையில் அழகாக இருக்கிறார். இதனை AI உதவியுடன் உருவாக்கிப் பகிர்ந்ததற்கு பார்கவ் வலேராவிற்கு (Bhargav Valera) நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெயரைக் கொண்டு பேஸ்புக் பக்கத்தில் தேடியதில் பார்கவ் வலேரா எனும் புகைப்படக் கலைஞர் கடந்த 28ம் தேதி இது தொடர்பாகப் பதிவிட்டுள்ளார். அதில், ராக் இந்து மத அடையாளங்களுடன் இருக்கும் படங்களைப் பதிவிட்டுள்ள சில சமூக வலைத்தள பக்கங்களில் ஸ்கிரீன் ஷாட்டுகளை பதிவிட்டு, “எனது கலைப்படைப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…” என்று கூறியுள்ளார்.
மேற்கொண்டு அவரது பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் பரவக் கூடிய ராக்கின் படங்களைக் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. அப்பதிவில், ‘AI concept Art’ அதாவது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ராக் இந்துமதத்திற்கு மாறியதாகப் பரவக் கூடிய படங்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் இதே போன்று போப் பிரான்சிஸ், பிரதமர் மோடி மாதிரியான AI படங்களும் பரப்பப்பட்டன. அவை குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
மேலும் படிக்க : பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
முடிவு :
நம் தேடலில், ஹாலிவுட் நடிகர் ராக் என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அது AI உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.