நடிகர் வெங்கடேசன் கால் உடைக்கப்பட்ட வழக்கில் கைதானவர் பாஜக இல்லை எனப் பொய் சொன்ன நாராயணன் திருப்பதி !

பரவிய செய்தி
கைதானவர்களில் யாரும் பாஜகவினர் இல்லை. தொடர்ந்து சன் நியூஸ் தொலைக்காட்சி இது போன்ற பொய் தகவல்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது. பாஜக மீது அவதூறு பரப்புவதற்கென்றே இது போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் பாஜக ஆதரவாளர்கள் பலர் பொய் செய்தி பரப்பியதற்காகத் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கருப்பசாமி குத்தகை தாரர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கடேசனை அவரது மனைவியும், பாஜக நிர்வாகிகள் சிலரும் அடித்து கால்களை உடைத்ததாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
#NewsUpdate | பாஜகவினருடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் வெங்கடேசனின் கால்களை உடைத்த மனைவி!#SunNews | #Madurai | #Venkatesan pic.twitter.com/g2p3AMLOfI
— Sun News (@sunnewstamil) June 18, 2023
அந்த செய்தியில், பானுமதி (வெங்கடேசன் மனைவி), பாஜகவைச் சேர்ந்த வைரமுத்து, மலைச்சாமி, ஆனந்தராஜ் ஆகியோரை தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. சன் நியூஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கைதானவர்களில் ஒருவர் ‘பாரத் மாதாகி ஜெ’ எனக் கோஷமிடுகிறார்.
கைதானவர்களில் யாரும் பாஜகவினர் இல்லை. தொடர்ந்து சன் நியூஸ் தொலைக்காட்சி இது போன்ற பொய் தகவல்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது. பாஜக மீது அவதூறு பரப்புவதற்கென்றே இது போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. https://t.co/Nklfkc5sVZ
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 19, 2023
இது தொடர்பாகத் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் “கைதானவர்களில் யாரும் பாஜகவினர் இல்லை. சன் நியூஸ் பொய் தகவல்களை பரப்புகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
நகைச்சுவை நடிகர் வெங்கடேசன் நையாண்டியான பதிவுகளைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வகையில் மோடி கட்டிய விமான நிலையம், சோழ இளவரசி குந்தவையின் அறியப் புகைப்படம் எனப் பல படங்களை நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார். அதனை உண்மையெனப் பலர் பரப்பியபோது, அது ஒரு நையாண்டி பதிவு என யூடர்னில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
வெங்கடேசனின் கால்கள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். ‘ETV Bharat’ தமிழ் இணையதளத்தில் இது தொடர்பாக வெளியான செய்தியில், “வெங்கடேசனின் மனைவி பானுமதி, வெங்கடேசனின் கார் ஓட்டுநரான மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த மோகன் என்கிற பென்ஸ் மோகன், மதுரை புதூர் கற்பகம் நகரைச் சேர்ந்த ராஜ்குமார், பாஜக நிர்வாகிகளான மதுரை கோசாகுளத்தைச் சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, செல்லூரைச் சேர்ந்த பாஜக 28வது வார்டு பட்டியல் அணி மண்டலத் தலைவர் மலைச்சாமி மற்றும் மதுரை மேலபனங்காடி பாஜக கிழக்கு மண்டலச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய ஆறு பேரையும் தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்தனர்” என்றுள்ளது.
மேலும் ‘புதிய தலைமுறை’ செய்தியிலும் அவர்கள் பாஜக நிர்வாகிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு இது தொடர்பாகத் தேடியதில், வெங்கடேசன் வழக்கில் கைதான வைரமுத்து என்பவர் பாஜக-வின் முக்கிய பொறுப்பாளர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்தது.
தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் பிரிவு பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் 2022, டிசம்பர் 6ம் தேதி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “இன்று மதுரை கிழக்கு மாவட்டம் பட்டியல் அணி தலைவர் அருமை சகோதரர் வைரமுத்து அவர்கள் இல்லத்தில் மதிய உணவு அருந்திய இனிய தருணம்” என சில படங்களைப் பதிவிட்டுள்ளார். அப்படத்தில் கைதான வைரமுத்து பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீமுக்கு சால்வை அணிவிப்பதைக் காண முடிகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்திலுள்ள பட்டியல் சமுதாய மக்களுடன் கலந்துரையாடல். @annamalai_k @LalSinghArya @MouryaBjp @blsanthosh pic.twitter.com/eLbqjeNLRA
— தடா.பெரியசாமி (@tadaperiyasami) June 10, 2022
அதே போன்று பாஜக பட்டியல் அணி பிரிவு மாநில தலைவர் தடா.பெரியசாமியுடனும் 2022, ஜூன், 10ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், 2022, நவம்பர் 20ம் தேதி மதுரை கிழக்கு மாவட்டம், சாணாம்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் வைரமுத்து கலந்து கொண்டு தடா.பெரியசாமியின் அருகில் இருப்பதைக் காணலாம்.
இன்று மதுரை கிழக்கு மாவட்டம், சாணாம்பட்டி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் நலத்திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. @annamalai_k @KesavaVinayakan @CTRavi_BJP @blsanthosh @scmorchaIT_TN pic.twitter.com/b1YvQtjBlC
— தடா.பெரியசாமி (@tadaperiyasami) November 20, 2022
மேலும் வைரமுத்துவின் விசிடிங் கார்டிலும் “செயற்குழு உறுப்பினர் (பட்டியல் அணி) மேற்கு மாவட்ட பார்வையாளர்” எனக் குறிப்பிட்டுள்ளதையும் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு வெங்கடேசன் தொடர்பான வழக்கில் கைதான வைரமுத்து என்பவர் பாஜக பொறுப்பாளர் என்பதை அறிய முடிகிறது. மலைச்சாமி, ஆனந்தராஜ் ஆகியோரின் தகவல்களைத் தேடிவருகிறோம். கிடைத்ததும் இக்கட்டுரையில் கூடுதல் தகவல்களாகச் சேர்க்கப்படும்.
இது வரை மற்ற கட்சி நபர்களைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் பொய் பரப்பி வந்த பாஜகவினர், தற்போது தங்களது சொந்த கட்சியினர் தவறு செய்து காவல் துறையில் சிக்கும் போது அவர்கள் பாஜகவே இல்லை எனப் பொய் பரப்பத் தொடங்கியுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், நகைச்சுவை நடிகர் வெங்கடேசனின் கால்கள் உடைக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களில் யாரும் பாஜக இல்லை என நாராயணன் திருப்பதி கூறியது உண்மை அல்ல. வைரமுத்து என்பவர் மதுரை கிழக்கு மாவட்ட பட்டியல் அணித் தலைவராக இருப்பதை பாஜகவினரின் பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது.