நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரம் தொடர்பாக பரபரப்பு செய்திகள் தற்போதும் வெளியாகி வருகையில், விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை பாண்டிச்சேரியில் பதிவு செய்துள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட ரோல்ஸ்ர் ராய்ஸ் காருடன் விஜய் இருக்கும் புகைப்படம் சர்க்கார் திரைப்படத்தின் தோற்றத்தில் உள்ளது. அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் சேர்க்கையில், 2018-ல் சர்க்கார் திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட டெஸ்ட் ஃபோட்டோசூட் என புகைப்படங்கள் கிடைத்தன.
புகைப்படத்தில் உள்ள PY01 BZ0005 எனும் எண்ணைக் கொண்டு vahan.nic.in இணையதளத்தில், தேடுகையில், இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் 2013-ல் பாண்டிசேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் உரிமையாளரின் பெயர் வேறாக உள்ளது.
நடிகர் விஜய் கார் விவகாரம் குறித்து பிபிசி தமிழில் வெளியான செய்தியில்” 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கி இறக்குமதி வரியாக 1.8 கோடி ரூபாய் செலுத்தி கொண்டு வந்துள்ளார். ஆனால், காரை வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்ற போது வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கி வருமாறு கூறப்பட்டதால், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் 20 சதவீத நுழைவு வரியை செலுத்தி விட்டு வாகனத்தைப் பதிவு செய்வதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் அதே மாதம் 23-ம் தேதி 20 சதவீத வரியை செலுத்தி விட்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் பயன்படுத்தி வந்தார் ” என வெளியாகி இருந்தது.
2020-ல் நடிகர் யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள் குறித்து ஓர் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அதில், அவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் முதலில் காண்பித்து உள்ளனர். அதன் பதிவு எண் TN07BV00014 என இடம்பெற்று இருந்தது.
புகைப்படத்தில் உள்ள TN07BV0014 எனும் எண்ணைக் கொண்டு vahan.nic.in இணையதளத்தில், தேடுகையில், நடிகர் விஜய் உடைய ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதும், 2012 ஆகஸ்ட் மாதமே சென்னை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. பிபிசி செய்தியிலும் 2012 ஜூலை இறுதியில் 20% வரியை செலுத்தி இருந்தார் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை பாண்டிச்சேரியில் பதிவு செய்துள்ளதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த கார் சர்க்கார் படத்திற்காக டெஸ்ட் ஃபோட்டோசூட் போது பயன்படுத்திய காரே. நடிகர் விஜய் உடைய ரோல்ஸ் ராய்ஸ் கார் 2012-ல் தமிழ்நாட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.