திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் எடுக்க வேண்டாம் என விஷால் கூறியதாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !

பரவிய செய்தி
இந்த ஆட்சி முடியும்வரை சிறிய படங்கள் (4 கோடி வரை) தயாரிக்க வர வேண்டாம். இங்கு நிலைமை சரியில்லை. ஒட்டுமொத்த சினிமாதுறையும் உதயநிதியின் கட்டுபாட்டில் இருப்பதால் சிறிய தயாரிப்பாளர்களால் சமாளிக்க முடியாது.
Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றிவிழாவில் பேசிய நடிகர் விஷாலின் பேச்சு சினிமா துறையை சார்ந்தவர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷால் “இந்த ஆட்சி முடியும்வரை சிறிய படங்கள் (4 கோடி வரை) தயாரிக்க வர வேண்டாம். இங்கு நிலைமை சரியில்லை. ஒட்டுமொத்த சினிமாத்துறையும் உதயநிதியின் கட்டுபாட்டில் இருப்பதால் சிறிய தயாரிப்பாளர்களால் சமாளிக்க முடியாது.” என்று கூறியதாக பாஜகவைச் சேர்ந்த செல்வகுமார் உட்பட பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
இந்த ஆட்சி முடியும் வரை யாரும் படம் தயாரிக்க முன் வராதீங்க .
நடிகர் விஷால் pic.twitter.com/dKz7zCN06K
— பேட்டை பிரவின் (@PETTAIPRAVEENP) September 29, 2023
உண்மை என்ன?
நடிகர் விஷால் பேசியது பற்றி அறிய முழு வீடியோ குறித்து தேடுகையில், கடந்த செப்டம்பர் 25 அன்று Friday Facts என்ற யூடியூப் பக்கத்தில் “விஷால் சர்ச்சை பேச்சு, சிறிய பட தயாரிப்பாளர்கள் ஆவேசம்” என்ற தலைப்பில் இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண முடிந்தது.
அதில், “யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு அறிவுரையா சொல்றேன். ஒரு கோடியில் இருந்து 4 கோடி வரைக்கும் நீங்க கையில் பணம் வைத்துக்கொண்டு சினிமா பண்ண வேண்டும் என்று வருகிறீர்கள் என்றால் தயவு செய்து இரண்டு வருடத்திற்கு சினிமாவிற்கு வர வேண்டாம்.
அந்த பணத்தில் Fixed deposit அல்லது உங்கள் குழந்தைகள் பெயரில் நிலமோ வாங்கி சந்தோசமாக இருங்கள். ஆனால் தயவு செய்து சினிமா எடுக்க வந்து விடாதீர்கள். சல்லி காசு கூட உங்களுக்கு’ திரும்ப வராது. ஏற்கனவே 120 படங்கள் காத்துக் கிடக்கின்றன. எங்க எங்களுக்கு ஓபனிங் கிடைக்கும். எங்க நாங்க போட்ட முதலீடு கிடைக்கும் என்று அவர்கள் ஏற்கனவே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏற்கனவே backlog-இல் இருக்கிறேன்” என்று நடிகர் விஷால் பேசியிருந்ததைக் காண முடிந்தது.
இதில் திமுக ஆட்சியைக் குறித்தோ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தோ அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டிற்கு காத்திருப்பதால் 2 ஆண்டுகளுக்கு திரைப்படம் தயாரிக்க வர வேண்டாம் எனக் கூறி இருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பு போல் திரையரங்குகளில் எந்த திரைப்படங்களாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஓடிடி, பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தாக்கத்தால் சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது அரிதான ஒன்றாக மாறி விட்டது. மேலும், எடுக்கப்பட்ட படங்களே வெளியிட முடியாமல் தயாரிப்பளர்கள் தவிக்கின்றனர். அதை குறிப்பிட்டே விஷால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க முன் வர வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
“மார்க் ஆண்டனி” படத்தை தணிக்கை செய்யும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் விஷால் குற்றம்சாட்டி தன்னுடைய எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்துவதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் இருக்கையில் அமர வைத்ததாகப் பரப்பப்படும் பொய் !
மேலும் படிக்க: தி கேரளா ஸ்டோரி விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றதாக அண்ணாமலை சொன்ன பொய் !
முடிவு:
நம் தேடலில், ஒட்டுமொத்த சினிமாதுறையும் உதயநிதியின் கட்டுபாட்டில் இருப்பதால் சிறிய படங்கள் (4 கோடி வரை) தயாரிக்க வர வேண்டாம் என நடிகர் விஷால் பேசியதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.