கம்யூனிஸ்ட் இந்து பெண்ணை முஸ்லீம் காதலன் தாக்கியதாக தவறாகப் பரப்பப்படும் கேரளா நடிகையின் புகைப்படங்கள் !

பரவிய செய்தி
அங்கிதா விஜய் என்னும் கம்யூனிஸ்ட் இந்து பெண் அப்துல் என்பவரைக் காதலித்து சொர்க்கம் செல்ல விரும்பினால். ஆனால், அவள் உயிருடன் இருக்கும் போதே நரகத்தைக் காட்டிவிட்டான் அப்துல். இது ஒரு இந்து முஸ்லிம் காதல். என்ன நடக்கிறது என்பதிலிருந்து ஏன் மக்கள் பாடம் கற்பதில்லை. அப்துல் என்பவன் அப்துல் மட்டுமே. எந்த வித்தியாசமும் இல்லை.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
கம்யூனிஸ்ட் ஆக மாறிய இந்து பெண்ணான அங்கிதா விஜய் என்பவர் அப்துல் என்ற இஸ்லாமியரைக் காதலித்து வந்ததாகவும், அந்நபர் அங்கிதாவை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் காயங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
A communist Hindu girl
named Ankita Vijay fell in
love with Abdul and wanted
to go to heaven,but Abdul showed her hell while she
was alive. This is the love
of a Hindu-MusIim!..Why people don’t learn
a lesson from what is happening ?! An Abdul lS Abdul,no difference! pic.twitter.com/76CVXmbCsB— Deepalakshmi 🚩 (@RSS_Activist) April 20, 2023
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அப்பெண் முஸ்லீம் காதலரால் தாக்கப்பட்டார் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிந்தது.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ‘நியூஸ் 18′ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றில் பரவக் கூடிய புகைப்படங்கள் உள்ளன. அச்செய்தியில், மலையாள நடிகை அனிக்கா விக்ரமன் தனது முன்னாள் காதலன் அனூப் பிள்ளையால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் காயங்களுடன் நடிகை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட புகைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட்டும் பதிவிடப்பட்டுள்ளது.
இதேபோல், ‘இந்தியா டுடே’ யூடியூப் பக்கத்திலும் ‘முன்னாள் காதலன் சித்திரவதை செய்ததாக மலையாள நடிகை அனிக்கா விக்ரமன் புகார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவிலும் முன்னாள் காதலனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனிக்கா சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியதுடன், பரவக் கூடிய புகைப்படங்களும் காண்பிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியிலும், கடந்த சில வருடங்களாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முன்னாள் காதலர் அனூப் பிள்ளையால் துன்புறுத்தப்பட்டதாக அனிக்கா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள தனது முன்னாள் காதலன் நியூயார்க்கில் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஓம் என்ற வார்த்தையைக் கேரளாவில் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக வதந்தி !
இஸ்லாமியர்கள் குறித்து பரப்பப்பட்ட பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ
முடிவு :
நம் தேடலில், பரவக் கூடிய புகைப்படத்தில் இருக்கும் அனிக்கா விக்ரமன் என்னும் மலையாள நடிகையை அவரது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை என்பவர் தாக்கியுள்ளார். அவர் இஸ்லாமியர் இல்லை என்பதை அறிய முடிகிறது.