‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் நடிகை தேவ லீனா இஸ்லாமியரை மணந்ததாகப் பரவும் தகவல்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
கேரளா ஸ்டோரி நடிகையான தேவ லீனா என்பவர் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தில் காட்டிய பொய்யான பின்னனியை முறியடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கல..Facebook Link
மதிப்பீடு
விளக்கம்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கடந்த மே 5 அன்று நாடு முழுவதிலும் வெளியானது. தமிழ்நாட்டில் வெளியான திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் இல்லை எனக் கூறி திரையரங்குகள் தரப்பில் இருந்து படத்தை நீக்கினர்.
இந்நிலையில் தற்போது தி கேராளா ஸ்டோரி திரைப்படத்தின் நடிகையான தேவோலீனா ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தின் முழு பொய்யின் பின்னணியையும் இப்படி முறியடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி நடிகை தேவோலீனா பட்டாசார்ஜியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
வட போச்சே!!@rajbhavan_tn pic.twitter.com/iXqPgmaJiM
— குத்தூசி (@PeriyaKuttoosi) May 22, 2023
உண்மை என்ன ?
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ளவர்களின் விவரங்கள் (Full Cast & Crew: The Kerala Story) குறித்து தேடிய போது, நடிகை தேவோலீனா பட்டாசார்ஜியின் பெயர் அதில் இடம்பெறவில்லை.
பரவி வரும் புகைப்படம் குறித்து தேவோலீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியதில், நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி தனது ஜிம் பயிற்சியாளரான ஷஹானாவாஸை 2022 டிசம்பரில் திருமணம் செய்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.
மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பாக பரவி வரும் ஒரு பதிவை மேற்கோள்காட்டி தேவோலீனா பட்டாசார்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய கணவர் ஒரு முஸ்லீம் என்றும், அவர்கள் இருவரும் படத்தைப் பார்த்ததாகவும், அவருடைய கணவர் அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அது தனது மதத்திற்கு எதிரானது என்று அவர் உணரவில்லை, ஒவ்வொரு இந்தியனும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றுப் பதிவு செய்துள்ளார்.
Its not always like that. My husband is a muslim & came with me to watch the movie & he appreciated it. He neither took it as an offence nor he felt it was against his religion. And i feel thats how every indian should be like. #TheKeralaStory https://t.co/Qr0NSd87X1
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) May 13, 2023
மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நியூஸ் 18 வெளியிட்டுள்ள கட்டுரையில் “’சாத் நிபானா சாத்தியா’ சீரியல் புகழ் தேவோலீனா பட்டாசார்ஜி தனது ஜிம் பயிற்சியாளர் ஷஹானாவாஸ் ஷேக்கை மணந்தார், அவரது திருமணப் படங்களைப் பார்க்கவும்” என்ற தலைப்பில் ஒரு புகைப்படத் தொகுப்பு காணப்பட்டது. அதில் பல புகைப்படங்கள் அவர் தனது கணவர் ஷஹானாவாஸுடன் இருப்பதைக் காட்டுகின்றன.
மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் குறித்து தேடியதில், அந்த புகைப்படத்தில் உள்ள நபர் அவரது நண்பரும், நடிகருமான விஷால் சிங் என இந்த கட்டுரையில் உள்ள புகைப்படத்தின் மூலம் காணமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடிக்கவில்லை. மேலும் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர், அவருடைய கணவர் அல்ல, அவருடைய நண்பர் நடிகர் விஷால் சிங். மேலும் அவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டே ஷஹானவாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.