அதானிக்கு கடன் தருவதாக கூறியதால் பேங்க் ஆப் பரோடா அமீரக கிளையில் பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனரா ?

பரவிய செய்தி
பேங்க் ஆப் பரோடா சி இ ஓ அதானிக்கு கடன் கொடுக்கப் போவதாக ஒரு புரளி கிளம்பியது.. உடனே ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த வங்கியின் கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து விட்டார்கள்..!
மதிப்பீடு
விளக்கம்
ஹிண்டர்பர்க் அறிக்கையின் விளைவால் அதானி குழுமம் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் ஏற்றம், இறக்கம் பற்றி கவலையில்லை. கடன் பெறுவதற்கான தகுதியான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் அதானிக்கு கடன் வழங்கப்படும் என பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் சஞ்சீவ் சத்தா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதானிக்கு பேங்க் ஆப் பரோடா கடன் வழங்க உள்ளதாக தகவல் பரவியதால் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவ்வங்கியின் கிளையில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேங்க் ஆப் பரோடா சி இ ஓ அதானிக்கு கடன் கொடுக்கப் போவதாக ஒரு புரளி கிளம்பியது..
உடனே ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த வங்கியின் கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து விட்டார்கள்… pic.twitter.com/lg12UTVSQS
— தமிழன் குணா (@gunapersonnel) February 27, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி குறித்து கூகுள் ஸ்ட்ரீட் வியூ(Google Street View)-ல் தேடுகையில், ஐக்கிய அமீரகத்தின் உள்ள அல் ஐன் நகரத்தில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் அதற்கு அருகில் உள்ள விஐபி ஜெராக்ஸ் & ஸ்டேஷனரி கடை இருப்பதை பார்க்க முடிந்தது.
பிப்ரவரி 26ம் தேதி பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின் அல் ஐன் கிளையை மூடுவதாக முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் யுஏஐ மத்திய வங்கியிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. 22.03.2023 முதல் அல் ஐன் கிளை மூடப்படுவதாக 20.01.2023 தேதி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், அல் ஐன் கிளையின் கணக்குகள் அபுதாபி கிளைக்கு மாற்றப்படும். ஆகையால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் ” என அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
— Bank of Baroda (@bankofbaroda) February 26, 2023
சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தை டாசில் என்பவர் பிப்ரவரி 25ம் தேதி ட்விட்டர் பக்கத்தில், அமீரகத்தில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களது வங்கி கணக்கை மூடுவதாக பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவிற்கு பிறகே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Every day people are out of banks to close account all over the UAE. pic.twitter.com/CVRw1f6Cyi
— Tasil 🧢✋ (@Ommattasil) February 25, 2023
மேற்கொண்டு பேங்க் ஆப் பரோடா வங்கியின் அல் ஐன் கிளை மூடுவதாக அறிவிப்பு ஏதும் வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில், ஜனவரி 20ம் தேதி பேங்க் ஆப் பரோடாவின் ஐக்கிய அமீரக இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
முடிவு :
நம் தேடலில், பேங்க் ஆப் பரோடா வங்கியின் தலைவர் அதானிக்கு கடன் அளிப்பதாக கூறியதால் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவ்வங்கியில் உள்ள கணக்குகளை மூடி டெபாசிட் பணத்தை எடுக்க மக்கள் குவிந்து உள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.
அப்புகைப்படம் ஐக்கிய அமீரகத்தின் அல் ஐன் கிளை மூடுவதாக வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கை மூட காத்திருந்த போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.