This article is from Mar 04, 2020

விதிமுறைகளை மீறி அதானிக்கு 45,000 கோடியில் நீர்மூழ்கி கப்பல் காண்ட்ராக்ட் வழங்கப்பட்டதா ?

பரவிய செய்தி

விதிமுறைகளை அப்பட்டமாக மீறி மோடி அரசு ஊழல். அதானிக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு நீர்மூழ்கிக் கப்பல் காண்ட்ராக்ட்.

மதிப்பீடு

சுருக்கம்

2020 ஜனவரியில் அதானி நிறுவனத்திற்கு 45,000 கோடி மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் வழங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜே வாலா குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பான அதானி நிறுவனத்தின் டெண்டரை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.

விளக்கம்

குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் அனுபவம் இல்லாத ” அதானி டிஃபன்ஸ் ஜேவி ” நிறுவனத்திற்கு 45,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதாக செய்தித்தாளில் வெளியானதை காண்பித்து, செய்தியின் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.

2019 செப்டம்பர் 12-ம் தேதி வெளியான எகானாமிக் டைம்ஸ் செய்தியில், ” இந்திய கப்பற்படையின் 75-I நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு திட்டத்திற்கு கடைசி நேரத்தில் அதானி நிறுவனம் டெண்டர் ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளதாக ” வெளியாகி உள்ளது.

2020 ஜனவரி 18-ம் தேதி வரை வெளியான செய்தியில், இந்தியக் கப்பற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்த பணிக்கு மத்திய அரசு அதானி நிறுவனத்திற்காக விதிமுறைகளை மீறி ஆதரவாக செயல்படுவதாக  காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டுகள் தெரிவித்த செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழுத் தலைவர் ரன்தீப் சுர்ஜே வாலா, ” கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதில் அதானி குழுமம் பூஜ்ஜிய அனுபவம் கொண்டது. மத்திய அரசு அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2016 (டிபிபி)-ஐ மீறி, அதானி டிஃபென்ஸ் ஜேவி இந்த திட்டத்தில் பங்கேற்க மோடி அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ” என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில்தான், 2020 ஜனவரி 22-ம் தேதி வெளியான செய்தியில், கப்பற்படைக்கு 45 ஆயிரம் கோடி மதிப்பில் 6 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் ஒப்பந்தப் பணிகளுக்கு இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனமும், அதானி நிறுவனமும் சேர்ந்து அளித்த டெண்டரை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்து உள்ளது.

மாறாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மசாகன் டாக் கப்பல் கட்டும் நிறுவனமும், லார்சன் அன்ட் டூப்ரோ (எல்&டி) நிறுவனமும் அளித்த டெண்டரை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. மசாகன் மற்றும் எல்&டி நிறுவனங்களின் டெண்டர் ஏற்கப்பட்டதை அடுத்து, அந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கப்பற்படைக்கு 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் கட்டுவதற்கான இறுதி ஒப்பந்தம் சமர்ப்பிக்க உள்ளன. இதற்காக 5 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து உள்ளதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இந்திய கப்பற்படைக்கு 45,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளதாக பரவும் செய்திகள் தவறானவை. அப்படி ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழுத் தலைவர் தெரிவித்து இருந்தார். அந்த செய்தியே தற்பொழுது தவறாக பரவி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader