அதானி குழுமம் மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியை ஒப்பிடுவது சரியா ?

பரவிய செய்தி

விப்ரோ 31.12.2021 விலை ₹715/-. தற்போது ₹394/-. வீழ்ச்சி 45% கண்டுகொள்ள, கவலைப்பட, பார்லிமெண்ட் கமிட்டி விசாரணை கேட்க? ஒரு பய இல்லை!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

அதானி குழுமம் பற்றி ‘ஹிண்டன்பர்க்’ வெளியிட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை மலைப்போல் சரியத் தொடங்கியது. அந்நிறுவனத்தின் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee) அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

Archive link 

இந்நிலையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரூ.715 ஆக இருந்தது. தற்போது ரூ.394 ஆகக் குறைந்து விட்டது. 45 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ள விப்ரோ நிறுவனம் பற்றிக் கண்டு கொள்ளவோ, கவலைப்படவோ, பாராளுமன்ற விசாரணைக் குழு அமைக்கக் கோரி கேட்கவோ யாரும் இல்லை என எஸ்.கே.யாதவ் என்பவர் டிவீட் செய்துள்ளார். அவரை தொடர்ந்து பலரும் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் குறித்து இணையத்தில் தேடிய போது, 2021 டிசம்பர் 31ம் தேதி ரூ.715 ஆக இருந்த அந்நிறுவனப் பங்குகள் சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளதைக் காண முடிகிறது. 

இது தொடர்பாக 2022 டிசம்பர் மாதம் ‘மார்கெட் டுடே’ என்ற இணையதளத்தில் “Why Wipro shares have fallen more than TCS, Infosys since 2021” என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் டி.சி.எஸ். மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களை விட விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்கட்டுரையில் கடந்த ஒரு வருடத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடையக் காரணமாக அதன் செயல்பாடு, மொத்த லாபம், எதிர்காலத்தில் வளர்ச்சியாகக் கணிக்கப்பட்டதில் ஏற்பட்ட குறைபாடு உள்ளிட்டவைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விப்ரோவின் பங்குகள் 45% வீழ பல காலாண்டுகள் (Quarters) ஆகியது. 

ஆனால், அதானி குழுமத்தின் பங்குகள் வெறும் 5 வர்த்தக அமர்வுகளில் (5Trading Sessions) 50 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது. இதற்கு விப்ரோ நிறுவனத்திற்குக் கூறப்பட்டதை போல வணிக நிகழ்வுகள் காரணமல்ல. மாறாக, மோசடி மற்றும் செயற்கையாகப் பங்குகளின் விலையை உயர்த்தியதாக ஹிண்டர்பர்க் அறிக்கை குற்றஞ்சாட்டியதை அடுத்து பங்குகளின் விலை வெகுவாக சரிந்தன. இந்த முறைகேடுகள் குறித்தே விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கக் கோரி வலியுறுத்துகின்றனர்.

விப்ரோ நிறுவனத்தைப் போன்று டி.சி.எஸ். மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் பங்குகளும் 2021 டிசம்பரிலிருந்து கடந்த ஓராண்டில் சரிவைக் கண்டுள்ளது. ஆனால், அது ஒரு சராசரியாக பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமேயாகும். 

முடிவு : 

நம் தேடலில், விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததாகப் பகிரப்படும் தகவல்கள் உண்மை எனக் கண்டறிந்தோம். ஆனால், அதனை அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பீடல்ல. மோசடி மற்றும் செயற்கையாக விலையை உயர்த்தியதாக வெளியான குற்றச்சாட்டே அதானியின் பங்குகளின் மதிப்பு குறையக் காரணம். அந்த குற்றச்சாட்டு குறித்தே விசாரணை கோரப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader