அண்ணாமலைக்கு கூட்டணியை முறிக்க யார் அதிகாரம் தந்தது என ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
அண்ணாமலை VS ஹெச்.ராஜா. அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் நம்மால் வெல்ல முடியுமா? பாஜக – அதிமுக கூட்டணி தொடரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று நானும் மத்திய அமைச்சர் ஆவேன். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா பரபரப்பு பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
அதிமுக, பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. எனினும், இரு கட்சியினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்படும் போது அக்கட்சி தலைவர்கள் கூட்டணித் தொடரும் என்றே கூறி வந்தனர்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், கூட்டணிக் குறித்து தேசிய தலைமையே முடிவு எடுக்கும் என நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்றை திமுகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து ஜூனியர் விகடனின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா தொடர்பான நியூஸ் கார்டு ஏதும் இடம்பெறவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான ஓபிஎஸ், இபிஎஸ் நியூஸ் கார்டுகளே வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் கலை செல்வன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. எங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் செய்தியே அதிகாரப்பூர்வமானது ” எனத் தெரிவித்து இருந்தார்.
பாஜக கட்சியில் ஏற்பட்டுள்ள கூட்டணி தொடர்பான பரபரப்பு நேரத்தில் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : அண்ணாமலையை தன்பால் ஈர்ப்பாளராக சித்தரித்து விகடன் பெயரில் பரப்பப்படும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : தமிழர்களை இழிவுப்படுத்தி வடநாட்டவர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என ஹெச்.ராஜா கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.