அதிமுக கொடியுடன் இருக்கும் வடமாநிலத்தவர்கள் புகைப்படம்.. சென்னை பேரணியில் எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
அடிக்கற வெய்யிலுக்கு நம்ம ஊர்க்காரர்கள் வரலைன்னு வடநாட்டுத் தொழிலாளர்களைக் கூட்டி வந்து பேரணி நடத்தியிருக்கிறார் எடப்பாடி.
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரண விவகாரம், சட்டம்-ஒழுங்கு மற்றும் திமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கைக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்க மே 22ம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. அதிமுகவினரின் பேரணியால் கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்த சம்பவம் பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்றது.
இந்நிலையில், அதிமுகவின் பேரணியில் கலந்து கொள்ள வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்ததாக இப்புகைப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
இன்றைய அதிமுக பேரணியில் கலந்துக்கொண்ட எடப்பாடியின் தீவிர விசுவாசிகள்.. இடமிருந்து வலமாக..
1) பப்பி லால் யாதவ்
2) தேள்பத்ரி சிங்
3) பான்பூர் பிரசாத்
4) மொசைக் பாலிஷ் ஷர்மா
5) அங்கத் அகர்வால்கடைசி ஆள் பேர் கேட்ட போது, 16 டிஜிட் நம்பர் சொல் என்றார்.. pic.twitter.com/EALDGbMfAz
— ஆல்தோட்டபூபதி (@thoatta) May 22, 2023
கவர்னர் மாளிகை நோக்கி ஆயி அதிமுக பேரணி ~ செய்தி…
உன்ன 4 வருசம் ஆட்சியில வச்சதுக்கு எங்க கொண்டுவந்து நிப்பாட்டி இருக்க பார்த்தியா…
இந்த (பேரணி) வேலைக்கு கூட வடக்கன்ஸ் தானா??….
மீட் மிஸ்ட்டர் கல்லாபெட்டி சிங்காரம் (@EPSTamilNadu)… 💦💦சேட்டு பையா: @CTR_Nirmalkumar pic.twitter.com/VmP8ejFA1g
— Raju Bhai (@rajubhai_DMK) May 22, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் Niranjan என்ற பெயர் வாட்டர் மார்க் உள்ளதை பார்க்க முடிந்தது. புதியதலைமுறை சேனலின் டெல்லி செய்திகளுக்கான நிருபர் நிரஞ்சன் குமார் கடந்த 2022ம் ஜூலை மாதம் இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
குடியரசு தலைவர் வழியனுப்பு விருந்தில் கலந்துகொள்ள டெல்லி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்க காத்திருக்கும் அதிமுகவின் டெல்லி தொண்டர்கள்
இடம்: தமிழ்நாடு புது இல்லை, டெல்லி pic.twitter.com/H2Z3Yu2KI3
— Niranjan kumar (@niranjan2428) July 22, 2022
அதில், ” குடியரசு தலைவர் வழியனுப்பும் விருந்தில் கலந்துகொள்ள டெல்லி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்க காத்திருக்கும் அதிமுகவின் டெல்லி தொண்டர்கள் இடம்: தமிழ்நாடு புது இல்லம், டெல்லி ” என இடம்பெற்று இருக்கிறது.
டெல்லி சென்ற எடப்படியார் அவர்களுக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு#பொதுச்செயலாளர்_எடப்பாடியார் pic.twitter.com/cWqJ4T1c3i
— அஇஅதிமுக (@ADMKofficial) July 22, 2022
இதேபோல், எடப்பாடி பழனிசாமி வரும் போது அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோவையும் நிரஞ்சன் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
அதிமுகவின் சென்னை பேரணியில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உள்ளனர். பேரணியின் முழு நேரலையானது செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், சென்னையில் அதிமுகவினர் நடத்திய பேரணிக்கு வடமாநிலத்தவர்களை அழைத்து வந்ததாகப் பரப்பப்படும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல. இப்புகைப்படம் 2022ல் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போது அங்கு வரவேற்பு அளிக்க அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை அறிய முடிகிறது.