ஊடகத்திலும், பத்திரிகையிலும் தான் அன்புமணி கட்சி நடத்துகிறார் என எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா ?

பரவிய செய்தி
ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் தான் அன்புமணி கட்சி நடத்துகிறார் – எடப்பாடி பழனிச்சாமி
மதிப்பீடு
விளக்கம்
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 18ம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஊடகத்திலும் பத்திரிகையிலும் தான் அன்புமணி கட்சி நடத்துகிறார்” என விமர்சித்ததாக நியூஸ் 7 தமிழ், நக்கீரன் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி உள்ளது.
அதில் அவர் பேசுகையில், ‘ அவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். அவரை நான் கட்சிக்காரராக் கூட பார்க்கிறது இல்லை, அவரைப் பொருட்படுத்துவதில்லை. அவருடைய பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி சொல்லிட்டு தான் ஊடகத்திலும், பத்திரிகையிலும் கட்சி நடத்திட்டு இருக்கார் ‘ எனப் பேசி இருக்கிறார்.
உண்மை என்ன ?
ஆகஸ்ட் 12ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அவரின் பேட்டி தந்தி டிவி சேனலில் வெளியாகி இருக்கிறது.
அதில் 11.20வது நிமிடத்தில் செய்தியாளர் ஒருவர், வட மாவட்டங்களில் பாமக உடைய ஆதரவு இல்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என டிடிவி தினகரன் கூறி இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பதில் அளிக்கையில், ‘ அவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். அவரை நான் கட்சிக்காரராக் கூட பார்க்கிறது இல்லை, அவரைப் பொருட்படுத்துவதில்லை. அவருடைய பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி சொல்லிட்டு தான் ஊடகத்திலும், பத்திரிகையிலும் கட்சி நடத்திட்டு இருக்கார் ‘ எனப் பேசி இருக்கிறார்.
இதேபோல், ‘பாமக ஆதரவில்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. டிடிவி தினகரன் கருத்துக்கு இபிஎஸ் ரியாக்சன் ‘ எனும் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டியை பாலிமர் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பற்றி கூறிய கருத்தை அன்புமணி ராமதாஸ் பற்றி கூறியதாக தவறாக வெளியிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், ஊடகத்திலும், பத்திரிகையிலும் தான் அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக வெளியான செய்தி தவறானது. அவர் டிடிவி தினகரனை கூறியதை அன்புமணி என தவறாக வெளியிட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.