முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை சொன்ன பொய் !

பரவிய செய்தி
ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு டெபாசிட் போனது. துணிந்து நின்றார்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஏனென்றால் அவர் தலைவர். – அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
சர்வதேச மகளிர் தினத்தன்று கோவையில் சாதனை மகளிர் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ஜெயலலிதாவுடன் யாரும் ஒப்பிடவில்லை. எல்லோரும் தனித்தன்மைதான். அரசியல் காட்சிகளில் சில கட்சிகளில் மேனேஜர் இருக்கிறார்கள். சில கட்சியில் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர் என்றால் ஒரு முடிவை எடுக்கும் போது துணிந்து எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு டெபாசிட் போச்சி. துணிந்து நின்றார்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஏனென்றால் அவர் தலைவர். டெபாசிட் போனதினால் பின்வாங்கவில்லை. ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போகலையா? போச்சி… தலைவர் இப்படிதான் நிற்பார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.
உண்மை என்ன ?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தார் என அண்ணாமலை பேசியது தொடர்பாக இணையத்தில் தேடினோம். ஜெயலலிதா அவர்கள் 1984ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆரின். மறைவிற்குப் பின்னர் 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜெயலலிதா போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, முதன் முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைந்தார். ஆனால், அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமரவில்லை.
1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. அத்தேர்தலில், தர்மபுரி மாவட்டத்திலிருந்த பர்கூர் (தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம்) மற்றும் ஈரோடு மாவட்ட காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், காங்கேயம் தொகுதி வெற்றியை ராஜினாமா செய்தார். அவ்வாண்டு ஜெயலலிதா முதன் முதலில் தமிழ்நாடு முதலமைச்சராகவும் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பர்கூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ஜெயலலிதா இம்முறை தோல்வியடைந்தார். அத்தொகுதியில் திமுக-வை சேர்ந்த சுகவனம் என்பவர் வெற்றி பெற்றார்.
2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்கள் எதிலும் ஜெயலலிதா தோல்வியடையவில்லை.
ஜெயலலிதா தோல்வியடைந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்த தகவல்கள் பற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேடினோம். அத்தேர்தலில் பர்கூர் தொகுதியில் 1,16,518 செல்லக்கூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதில், வெற்றி பெற்ற திமுக-வை சேர்ந்த சுகவனம் 59,148 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா 50,782 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெற்றி பெற்றவருக்கும் இரண்டாவதாக வந்தவருக்கும் 8,366 வாக்குகள் வித்தியாசம் எனத் தேர்தல் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைப்புத் தொகை (டெபாசிட்) :
தேர்தலில் போட்டியிட விரும்புபவர் தனது வேட்புமனுவுடன் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்யும் வைப்புத் தொகையினையும் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவான செல்லத்தகுந்த வாக்குகளில், ஆறில் ஒரு பங்கு வாக்கினைப் பெற்றால்; அவர் செலுத்திய வைப்புத் தொகை தேர்தல் ஆணையத்தால் திருப்பி செலுத்தப்படும்.
அவ்வாறு பெறாத நிலையில், தான் செலுத்திய டெபாசிட்டை இழந்து விடுவார். 1996ம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா சுமார் 43 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார். இதிலிருந்து ஜெயலலிதா டெபாசிட் இழக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரம்: மாற்றி மாற்றிப் பேசும் அண்ணாமலை !
முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பல பொய்களின் உண்மைத் தன்மைகளை யூடர்னில் செய்திகளாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு
முடிவு :
நம் தேடலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது உண்மை அல்ல. 1996ம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தேர்தலில் 8,366 வாக்குகள் வித்தியாசம் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். ஆனால், டெபாசிட்டை இழக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.