This article is from Jun 01, 2019

அதிமுக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக குருமூர்த்தி ட்வீட்|உண்மை என்ன?

பரவிய செய்தி

தமிழகத்தில் அதிமுக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளது, பாஜக போட்டியிட்ட தொகுதியில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்து உள்ளது. தமிழகத்தில் இருப்பது யாருக்கான எதிர்ப்பு அலை ? என ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட் செய்து உள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

அதிமுக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக கூறும் ஆடிட்டர் குருமூர்த்தியின் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள தேர்தல் முடிவுகளில் இருந்து அறிய முடிகிறது.

விளக்கம்

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர்த்து அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வலது சாரி ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி மே 31-ம் தேதி தன் ட்விட்டர் கணக்கில் ஓர் தகவலை பதிவிட்டு இருந்தார்.

அதில், அதிமுக 2 இடங்களில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 5 இடங்களில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், மேலும் 5 இடங்களில் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், பாஜக 2 இடங்களில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரு இடத்தில் மூன்று லட்சத்திற்கு அதிகமாகவும், மற்றொரு இடத்தில் மூன்று லட்சத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளது. மோடிக்கான எதிர்ப்பு அலையாக இருந்தால் அனைத்து இடங்களிலும் 4 முதல் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளில் தோல்வி அடைந்து இருக்க வேண்டும். அப்படியென்றால், இது யாருக்கு எதிரான அலை ? என்று கேள்வி எழுப்பினார்.

ஆடிட்டர் குருமூர்த்தி கூறியப்படி பார்த்தால், அதிமுக சார்பில் அதிகபட்சமாக தம்பிதுரை மற்றும் என்.ஆர்.சிவபதி ஆகியோர் போட்டியிட இரண்டு தொகுதிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளனர். இவ்விருவரை தவிர வேறு எந்தவொரு அதிமுக வேட்பாளரும் 4 லட்சம் வாக்கில் தோல்வி அடையவில்லை.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக திண்டுக்கலில் போட்டியிட்ட ஜோதி முத்து 5,38,972 வாக்கு வித்தியாசத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 5,07,955 வாக்கு வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக திருச்சிராப்பள்ளியில் 4.5 லட்சம் வாக்கிலும், வட சென்னையில் 4.6 லட்சம் வாக்கிலும் தோல்வி அடைந்தனர்.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், 2019 தேர்தலில் 2.59 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா 3.3 லட்சம் வாக்கில் தோல்வி அடைந்தார். ஆனால், அதே தொகுதியில் சென்ற ஆண்டு அதிமுக 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கட்சி இரு தொகுதிகளில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக தவறான தகவலை பதிவிட்டு உள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

அவரின் ட்விட்டர் பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிமுக கூட்டணியால் தான் பாஜக இத்தனை லட்சம் வாக்குகளை பெற்றதாகவும், தனித்து போட்டியிட்டு இருந்தால் இத்தனை லட்ச வாக்குகளை பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என கிண்டல் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader