எம்.ஜி.ஆர் இயக்குநர் வி.சாந்தாராம் காலில் விழும் புகைப்படத்தை தவறாகப் பரப்பும் திமுகவினர் !

பரவிய செய்தி

அந்தக்காலத்து எடப்பாடி தான் MGR! இந்தக்காலத்து MGR தான் எடப்பாடி! அவர்களுக்குத் தேவை ஒரு கால் மட்டுமே… தொட்டுத் தொடரும் பாரம்பரியம்… காலில் விழும் MGR யை தலைவர் பார்க்கும் பார்வையைக் கவனிக்கவும்…

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுகவை நிறுவியவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரது காலில் விழுவது போன்ற புகைப்படத்தை, தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

அப்பதிவுகளில் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு ‘அந்தக்காலத்து எடப்பாடி தான் MGR! இந்தக்காலத்து MGR தான் எடப்பாடி! அவர்களுக்கு தேவை ஒரு கால் மட்டுமே’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை என்ன? 

எம்.ஜி.ஆர். ஒருவரது காலில் விழுவதாகப் பரப்பப்படும் புகைப்படத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் கலைஞர் ஆகியோர் இருப்பதையும் காண முடிகிறது. 

அப்புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். ‘இலங்கை தமிழ் சங்கம்’ என்னும் இணையதளத்தில் பரவக்கூடிய புகைப்படமும், எம்.ஜி.ஆர். பற்றிய சில தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 

Archive link 

‘எம்ஜிஆர் நினைவு – பகுதி 13’ என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அக்கட்டுரையில், பரவக் கூடிய புகைப்படத்தின் கீழே ‘MGR bending down in front of director V.Shantaram’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  

அப்புகைப்படம் குறித்து எம்.ஜி.ஆரின் எழுத்து உதவியாளர் ரவீந்தர் (காஜா முஹைதீன்) கூறிய தகவல்களும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஒரு நிகழ்ச்சிக்கு இயக்குநர் சாந்தாராமை விருந்தினராக அழைத்துக் கவுரவித்தார்.

அப்போது செயின் ஒன்றினை பரிசாக வழங்கினார். அது எதிர்பாராத விதமாக செயின் கீழே விழுந்தது. அதனை எடுக்க இருவரும் முற்பட்டபோது போது, சாந்தாராமைத் தடுத்து சாந்தாராமின் கால்களுக்கு முன்னால் விழுந்த சங்கிலியை எம்.ஜி.ஆர். எடுத்தார். இதனை சில புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்து, அடுத்த நாள் ‘எம்.ஜி.ஆர். சாந்தாராமின் காலில் விழுந்து ஆசி பெற்றார்’ என்று செய்திகள் வந்தன.

அதனைப் படித்த எம்.ஜி.ஆர். அப்படி ஆசீர்வாதம் கிடைத்தால் மகிழ்ச்சிதான். நமக்கு மேல் இருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது வெட்கமில்லை. அடக்கம் என்பது ஒரு அற்புதமான பண்பு என்பதை இது காட்டுகிறது” என எம்.ஜி.ஆர். கூறியதாக அவர் பதிவு செய்துள்ளார். 

மேற்கொண்டு அந்நிகழ்வு குறித்துத் தேடியதில் கூகுள் ஆர்ட் அண்ட் கல்சரில் வேறொரு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், எம்.ஜி.ஆர், வி.சாந்தாராம், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுவதைக் காண முடிகிறது.

2015ல் விகடன் இணையதளத்தில் “எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், எம்.ஜி.ஆர் பகிரங்கமாக காலில் விழுந்து வணங்கிய இரண்டு பேர். ஒன்று நடிகர் எம்.கே.ராதா, மற்றொன்று இந்தி இயக்குநர் சாந்தாராம் பெயர்கள் குறிப்பிட்டப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு “ஷூ லேஸ்” கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !

இதேபோல் பாரத் ஜோடோ யாத்திரையின் போது முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் ராகுல் காந்தியின் ஷூ லேஸ்-ஐ கட்டிவிட்டதாக ஒரு தவறான செய்தி பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்குநர் வி.சாந்தாராம் காலில் விழுந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிட்டு தவறாகப் பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader