பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி.
மதிப்பீடு
விளக்கம்
மே, 22ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று தமிழ்நாட்டில் நிகழும் கள்ளச்சாராய மரணம், சட்ட ஒழுங்கு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு கொடுத்தனர்.
சென்னையில் உள்ள சின்னமலை பகுதியில் பேரணி நடைபெற்ற பிறகு ஆளுநர் மாளிகைக்குச் சென்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. பேரணி நடைபெற்ற பகுதிகளில் காலை முதலே போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் காத்திருந்த சம்பவம் கண்டனத்தைப் பெற்றது.
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வாங்க..! – ஜெ
♦ தாயைப் போல பிள்ளை 🥱 pic.twitter.com/yolOlPYE95
— ஷிவானி சிவக்குமார் (@SHIJA25) May 22, 2023
சண்டைன்னு வந்தா சட்டை கிளியத்தானே செய்யும் 🤦
இவரை நம்பியும் கூட்டம் போகுதுன்னா, அது பிரியாணிக்காக இருக்கும் 🤭 pic.twitter.com/JZS9aJFmSb
— Shahul Hameed (@ShahulH68603182) May 22, 2023
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மயக்கம் அடைந்தது பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடுகையில், அதிமுகவின் பேரணி பற்றி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று உள்ளது. அதில், “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், ஈபிஎஸ் பேட்டி” என்றுள்ளது. அதிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம், தேதி ஆகியவை பரவக் கூடிய நியூஸ் கார்டிலும் இருப்பதைக் காண முடிகிறது.
#JUSTIN || “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை”
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், ஈபிஎஸ் பேட்டி #admk | #eps pic.twitter.com/Ib1jvc68Da
— Thanthi TV (@ThanthiTV) May 22, 2023
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோ ‘புதிய தலைமுறை’ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் செய்தியாளர் ஒருவர் “அதிமுக பேரணிக்குக் காவல் துறையினர் எவ்வளவு தூரம் அனுமதி அளித்தார்கள்? போக்குவரத்து நெரிசலின் காரணமாக பொது மக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து உள்ளனர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி “நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளுநரிடம் மனு கொடுக்க டி.ஜி.பி.யிடம் அனுமதி கோரினோம். நீங்கள் இந்த இடத்தில் போங்கள். அங்கிருந்து ஊர்வலமாக வர முடியாது. காரில் வந்து விடுங்கள் எனக் கூறினார்.
காவல் துறையினர் என்ன கண்டிஷன் சொன்னார்களோ அதன்படிதான் நாங்கள் செய்துள்ளோம். இதனை காவல்துறைதான் ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டும். அதற்கு தானே அவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிக்குப் பாதுகாப்பு அளிப்பது கிடையாது. முறையாகப் பாதுகாப்பு செய்திருந்தால் இந்த குளறுபடி நடந்து இருக்காது” எனக் கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து ‘பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறவில்லை என்பதையும், தந்தி டிவியும் அப்படி ஒரு நியூஸ் கார்டினை வெளியிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது. அது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு.
மேலும் படிக்க : அதிமுக கொடியுடன் இருக்கும் வடமாநிலத்தவர்கள் புகைப்படம்.. சென்னை பேரணியில் எடுக்கப்பட்டதா ?
முடிவு :
நம் தேடலில், அதிமுக நடத்திய பேரணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில் பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் எனக் கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. அவர் அப்படிக் கூறவில்லை என்பதை அவரது செய்தியாளர் சந்திப்பில் மூலம் அறிய முடிகிறது.