ஆப்கானில் பெண்களை விற்பதாகவும், சாலையில் சுட்டுக் கொல்வதாக பரவும் பழைய வீடியோக்கள் !

பரவிய செய்தி
100 dinnar பாகிஸ்தான் பணத்திற்கு விற்கப்படும் ஆப்கானிஸ்தான் 13-18வயது பெண்கள்….
மதிப்பீடு
விளக்கம்
ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் உள்ள பெண்களின் நிலையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களை அடிமைப்படுத்தும், அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கும் சட்டங்களை கொண்டிருப்பவர்கள் தாலிபான்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களின் நிலை பற்றிய கேள்விகள் உலக நாடுகள் முழுவதும் இருந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களை விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் மத்தியில் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் காட்சி என இவ்விரு வீடியோக்களும் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பெண்களை விற்கும் வீடியோ ?
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 13-18 வயது பெண்களை 100 தினார் பாகிஸ்தான் பணத்திற்கு விற்பதாக பரவும் வீடியோ ஆப்கானிஸ்தானை சேர்ந்தது அல்ல, அது லண்டனில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நாடக வீடியோ.
மேலும் படிக்க : அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா ?| உண்மை என்ன?
2014-ல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதை எடுத்துரைக்கும் வகையில் மாதிரி நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், அந்த வீடியோ கடந்த ஆண்டே சமூக வலைதளங்களில் தவறான தகவல் உடன் பரவியது.
ஆப்கானில் பெண்ணை கொலை செய்யும் வீடியோவா ?
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவரை மக்கள் மத்தியில் நிற்க வைத்து சுட்டுக் கொல்வதாக பரவும் வீடியோ குறித்து தேடுகையில், ” அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட ஒரு தீவிரவாத குழு வடமேற்கு சிரியா நகரில் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றதாக ” 2015-ல் vice எனும் இணையதளத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
ஆப்கானில் பெண்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் செய்திகள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ஆப்கானிஸ்தான் பெண்களை 100 தினார் பாகிஸ்தான் பணத்திற்கு விற்பதாகவும், பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொன்றதாக பரவும் வீடியோக்கள் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டவை அல்ல என அறிய முடிகிறது.