ஆப்கானிஸ்தானில் இருந்து 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்தார்களா ?

பரவிய செய்தி
மரண பயத்துடன் இருந்த 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்தது இந்திய ராணுவ விமானம் !
மதிப்பீடு
விளக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்து விட்டதால் அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்த பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பயத்துடன் இருந்த 800 இந்தியர்கள் ஒரே ராணுவ விமானத்தில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக பிரதமர் மோடிக்கு நன்றி கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் திரும்பியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியான தி ஹிந்து செய்தியில், காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர்கள் மற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உள்பட 140 இந்தியர்கள் சிறப்பு ராணுவ விமானத்தில் புறப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்படி நூற்றுக்கணக்கில் இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவதாகவே செய்திகள் கிடைத்தன. ஆனால், 800 இந்தியர்களை ஒரே ராணுவ விமானத்தில் அழைத்து வந்ததாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
ஆகையால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2013-ல் பிலிப்பைன்ஸின் டகோலோபனில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை சூறாவளி காரணமாக மணிலாவுக்கு சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவதாக ” பசிபிக் ஏர் போர்சஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் இந்திய ராணுவம் அழைத்து வந்ததாக பகிரப்படும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது. வைரல் செய்யப்படும் புகைப்படம் 2013-ல் பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 140 இந்தியர்களை சிறப்பு ராணுவ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படும் தகவல் வெளியாகி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.