பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் மகள் இறந்ததாக வதந்தி !

பரவிய செய்தி
புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் மகள் இரத்தப் புற்றுநோயால் மரணம். ஆழ்ந்த இரங்கல். பல புற்றுநோயாளிகள் குணமடைய பொருளுதவி செய்த மனிதாபிமானமுள்ள மாமனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு
விளக்கம்
பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடியின் மகள் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாக அஃப்ரிடி மற்றும் இறந்த குழந்தையின் புகைப்படம் தமிழ் முகநூல் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சாஹித் அஃப்ரிடிக்கு அஜ்வா, அன்ஷா, அக்ஷா, அஸ்மரா, அல்ஹம்துலில்லா என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், நான்காவது மகளான அஸ்மரா அஃப்ரிடி இறந்து விட்டதாக கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே இந்திய சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் வதந்தியே!.
2016-ல் சாஹித் அஃப்ரிடியின் மகள் அஸ்மராவிற்கு உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் நடைபெற்று இருந்தது. 2016-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி தன் மகள் குணமடைந்து வருவதாக நலம் விரும்பிகளுக்கு நன்றி கூறி தன்னுடைய முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
சாஹித் அஃப்ரிடியின் மகள் இறந்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும், செய்தியும் இல்லை. இறந்ததாக காண்பிக்கப்படும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை அஃப்ரிடியின் மகள் அல்ல. 2011-ல் அஃப்ரிடி தன் தந்தை இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சில தவறான புகைப்படங்களை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டில் இப்படி வதந்திகள் பரவியது குறித்து டெக்கான் குரோனிகல் உள்ளிட்ட சில இந்திய செய்திகளில் வெளியாகி இருந்தன. அஃப்ரிடியின் மகள் இரத்த புற்றுநோயால் இறந்ததாக கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை வதந்தி பரப்பப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், சாஹித் அஃப்ரிடியின் மகள் இறந்ததாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், கடந்த 4 ஆண்டுகளாக இதே புகைப்படத்துடன் வதந்தி பரவி வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.