This article is from Aug 02, 2020

அகரம் அறக்கட்டளையின் வரவு செலவு 2 லட்சம் கோடியா ?| கிண்டலுக்கு உள்ளாகும் வதந்தி !

பரவிய செய்தி

அகரம் பவுண்டேசன் 2006 முதல் 2020 க்குள் வரவு செலவாக 2 லட்சம் கோடிகளை கணக்கு காட்டியுள்ளது. கையிறுப்பாக 15000 கோடிகளை வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டியுள்ளனர். இங்குதான் பிரச்சனை இத்தனை கோடிகள் அளவுக்கு ஒரு NGO க்கு நிதி எப்படி?? கருப்பு பணத்தை கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுக்க பயன்பட்டதா??? மும்பையிலிருந்து மட்டும் பல ஆயிரம் கோடிகள் வந்துள்ளதால் இதன் பின்ணணியும் விசாரிக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சினிமா நடிகர்கள் கருத்து சொல்லும் போதெல்லாம் பெரிதாய் விவாதத்துக்கு உள்ளாகி விடும். பிரபலமானவர்கள் கூறும் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த கருத்து தங்களுக்கு ஆதரவாக இருந்தால் கொண்டாடப்படுவார்கள், இல்லையெனில் தூற்றப்படுவார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் EIA 2020 எனும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து உழவன் அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பிய பிறகு அவரின் சகோதரர் நடிகர் சூர்யாவும் தன்னுடைய கருத்தினை தெரிவித்து இருந்தார். இருவரின் கருத்தால் ஊடகங்களில் விவாதங்கள் கூட நிகழ்ந்தன. அவர்களின் கருத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவும் அளித்து இருந்தனர். அதேபோல், எதிர் தரப்பினர் கிண்டல், கேலி, வதந்தியையும் கையில் எடுத்து உள்ளார்கள்.

நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இப்படி கருத்து கூற காரணம் ” அகரம் அறக்கட்டளை ” மூலம் கோடிக்கணக்கில் திருட முடியாதபடி மோடி வைத்த ஆப்பு தான் காரணம் என்றும், 2006 முதல் 2020-க்குள் 2 லட்சம் கோடியை அகரம் அறக்கட்டளை வரவு செலவாக காட்டி உள்ளதாகவும், 15,000 ஆயிரம் கோடியை கையிருப்பாக வைத்துள்ளதாக ஓர் தகவலை பரப்பி வருகிறார்கள். இதற்கு பின்னால் கருப்பு பணம், ஹவாலா இருப்பதாக சந்தேகங்கள் கூட எழுப்பி உள்ளனர்.

இதை பார்த்த பலரும் ” 2 லட்சம் கோடி நீ பார்த்தா ” எனக் கிண்டல், கேலி செய்யத் துவங்கி இருக்கிறார்கள். அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை, சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பாக சிறு செய்திகள் கூட இல்லை. எனினும், இப்படியொரு வதந்தியை பரப்பக் காரணம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை உருவாக்கவே தான் தவிர வேறெதுவும் இல்லை.

Twitter link | archived link 

2006-ம் ஆண்டு முதல் நடிகர் சூர்யா குடும்பத்தினர் இயங்கி வரும் ” அகரம் அறக்கட்டளை ” மூலம் தோராயமாக 3,000 மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில், அகரம் விதைத்திட்டத்தின் மூலம் இதுவரை 2500 மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள் என்றும், ப்ளஸ் டூ எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த, ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.

மேலும் படிக்க : அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல என சூர்யா தெரிவித்தாரா ?

நடிகர் சூர்யாயை சுற்றி வதந்திகள் சூழ்வது புதிது அல்ல. ஆட்சியாளர்களின் திட்டங்கள் குறித்து கருத்து கூறும் போதெல்லாம் அவரை வைத்து வதந்திகளை பரப்பி விடுகின்றனர். 2019 ஜூலை மாதம் ” எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல ” என சூர்யா கூறியதாக வதந்தியை பரப்பி இருந்தார்கள். அதற்கு காரணம், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை. சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என நீட் தேர்வு குறித்து கருத்து கூறினார் என்பதற்காக போலியான செய்தியை உருவாக்கி இருந்தனர்.

மேலும் படிக்க : நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா ? உருவாக்கப்படும் வதந்தி.

அதேபோல், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பழைய வீடியோ ஒன்றினை வைரல் செய்தனர். அதற்கு காரணம், தேசியக் கல்விக் கொள்கை குறித்து அவர் வெளிப்படையாக பேசி இருந்தார். அதனால், சூர்யா முஸ்லீம் ஆக மதம் மாறினார் என வீண் வதந்தியை பரப்பி இருந்தனர்.

யாராவது கேள்வியோ, கருத்தோ கூறினால் அதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் தூற்றப்படுவதும், வதந்தியை பரப்புவது மட்டுமே பிரதானமாக உள்ளன. சில நேரங்களில் பரப்பப்படும் வதந்தி கிண்டலுக்கு உள்ளாகுவதையும் பார்க்க முடிகிறது. அதில், இதுவும் ஒன்றாக இணைந்து உள்ளது. ஆதாரமற்ற வதந்திகளை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் உலாவும் வதந்திகள் குறித்து பலருக்கும் எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இங்குள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader