அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல என சூர்யா தெரிவித்தாரா ?

பரவிய செய்தி
எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல – நடிகர் சூர்யா
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் நடிகர் சூர்யா தேசியக் கல்விக் கொள்கை 2019 குறித்து மேடையில் பேசி இருந்தார். நீட் உள்ளிட்ட தேர்வுகள் குறித்தும் தனது கருத்தை எடுத்துரைத்தார். அதன் பிறகு, அரசியல் கட்சியினர் நடிகர் சூர்யாவின் கருத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு தாம் பொறுப்பு இல்லை என பதில் அளித்து இருப்பதாக செய்தி சேனல் ஒன்றின் லோகோ உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு தொடர்பான சோதனைகள் நடந்ததா, சூர்யா அப்படியொரு கருத்தை தெரிவித்து இருந்தாரா என்பது தொடர்பாக ஆராய்ந்த பொழுது செய்திகளில், அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு தொடர்பான எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை.
எனினும், பாலிமர் செய்தியில் நடிகர் சூர்யா குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை. சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என சூர்யா ட்விட்டரில் கூறியது செய்தியாக வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பரவிய செய்தியில் பாலிமர் செய்தியின் லோகோ இருப்பதால், முகநூலில் பாலிமர் செய்தியின் பக்கத்திற்கு சென்று பார்த்த பொழுது , ” நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை ” என மேற்கண்ட படத்தில் இருந்ததை காண முடிந்தது.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை என சூர்யா கூறியதை அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல என கூறியதாக தவறான செய்திகளை போட்டோஷாப் செய்துள்ளார் என்பதை இதில் இருந்து அறிய முடிகிறது.
செய்தி சேனல்களின் லோகோ உடன் போட்டோஷாப் செய்திகள் முகநூலில் அதிகம் உலாவுகிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேசிய காரணத்திற்காக சூர்யா மீது தொடர்ந்து சமூக வலைதளப் பதிவுகளிலும், தவறான செய்திகள் மூலமும் சிலர் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.