அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளச் சொன்னாரா பாஜகவின் நிர்மல் குமார் ?

பரவிய செய்தி
அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது – நிர்மல் குமார் ( பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு).
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட வன்முறைகளும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக கதிர் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
ஜூன் 18-ம் தேதி நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தில், ” இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதும் #அக்னிபத் திட்டத்தை வெளிநாடு கைக்கூலிகளின் அழுத்தம் காரணமாக கலவரத்தை உண்டாக்கும் தேசவிரோத சக்திகளை புறக்கணிப்போம்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதும் #அக்னிபத் திட்டத்தை வெளிநாடு கைக்கூலிகளின் அழுத்தம் காரணமாக கலவரத்தை உண்டாக்கும் தேசவிரோத சக்திகளை
புறக்கணிப்போம்.#ISupportAgnipathScheme pic.twitter.com/iHXgJGZ0tN— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) June 18, 2022
நிர்மல் குமார் குறித்து பரவும் நியூஸ் கார்டு பற்றி கதிர் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஜூன் 18-ம் தேதி அப்படி எந்த கார்டும் வெளியாகவில்லை, அது பழைய நியூஸ் கார்டு.
வைரல் செய்யப்படும் செய்தி குறித்து பாஜகவின் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்கையில், ” இது போலியான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது என பாஜகவின் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.