2019ல் திறந்து வைத்த குஜராத் மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் திறந்து வைத்தாரா மோடி ?

பரவிய செய்தி

2019ம் ஆண்டு திறக்கப்பட்ட அகமதாபாத் முதல் கட்ட மெட்ரோ திட்டத்தை மீண்டும் திறந்து வைத்த மோடி.

twitter link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் அகமதாபாத் நகரில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 2019ம் ஆண்டே பிரதமர் மோடியால் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், மோடி ஏன் மீண்டும் அதனை திறந்து வைக்கிறார். குஜராத் தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற வித்தைகளை செய்கிறாரா என எதிர்கட்சியினரால் சமூக வலைத்தளங்களில் ஒரு குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இதனை உத்தரப் பிரதேச காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரு வேறு ஆண்டுகளில் வெளியான செய்திகளை மேற்கோள்காட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

Archive link 

Tweet Link

உண்மை என்ன ?

2019ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திறந்து வைத்தது முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியே. இந்த மெட்ரோ திட்டத்தின் மொத்த தூரம் 27.5 கிமீ. இதில் ஒரு கட்டமாக, வஸ்திரால்(Vastral) மற்றும் அப்பரேல் பூங்காவை(Apparel Park) இணைக்கும் 6.5 கிமீ தூரத்திற்கான மெட்ரோ பகுதி மட்டுமே 2019ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது 2014ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட திட்டம்.

இதுகுறித்து குஜராத் மெட்ரோ ரயில் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் மீதமுள்ள இடங்களை இணைக்கும் மெட்ரோ திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இது 21 கிமீ தூரம் உள்ள தல்ட்டேஜ்(Thaltej) மற்றும் வஸ்ட்ரால்(Vastral) எனும் இடங்களை இணைக்கும் திட்டம். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் மீதமுள்ள பகுதிகளே இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அகமதாபாத் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு பாகமாக  பிரிக்கப்பட்டது தெரியவருகிறது. இதனால் பிரதமர் மோடி 2019 மற்றும் 2022ம் ஆண்டும் அகமதாபாத் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைத்துள்ளார்.

பிரதமர் மோடியால் இரண்டு கட்டமாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு ஏன் ஒரே திட்டத்தை இரண்டு முறை திறந்து வைத்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு :

நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடி 2019-ல் திறந்து வைத்த குஜராத் அகமதாபாத் முதல் கட்ட மெட்ரோ திட்டத்தை மீண்டும் திறந்து வைப்பதாக பரவும் தகவல் தவறானது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மீதமுள்ள பகுதிகளின் பணிகள் முடிவடைந்த பிறகு திறந்து வைத்த மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் திறந்து வைப்பதாகத் தவறாகப் பதிவிட்டு வருகின்றனர் எனத் தெரியவருகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader