ஆண்டுக்கான கட்டணத்தை செமஸ்டருக்கானது எனத் தவறான செய்தியை வெளியிட்ட முன்னணி செய்தி ஊடகங்கள் !

பரவிய செய்தி
புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE. பொறியியல் படிப்பு பி.இ, பி.டெக், பி.ஆர்க் ஒரு செமஸ்டருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ.79,000(குறைந்தபட்சம்), ரூ.1,89,000 (அதிகபட்சம்).
மதிப்பீடு
விளக்கம்
பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கான கட்டணம் மற்றும் பேராசிரியர்களின் ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி ஏ.ஐ.சி.டி.இ புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான ஆண்டு கட்டணம் குறைந்தபட்சம், அதிகபட்சம் என நிர்ணயித்து இருப்பதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.
அதில், பொறியியல் படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.79,000, அதிகபட்சம் ரூ.1,89,000, டிப்ளமோ படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.67,900 , அதிகபட்சம் ரூ.1,40,900 என ஆண்டுக்கான கட்டணத்தை செமஸ்டருக்கான கட்டணம் என பிபிசி தமிழ், புதியதலைமுறை, தினமலர், நியூஸ் 7 தமிழ், கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் உள்ளிட்ட பல முன்னணி செய்தி ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கின்றன.
உண்மை என்ன ?
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ) இணையதளத்தில் 2021 டிசம்பர் 12-ம் தேதி கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான கட்டண விதிப்பு குறித்து வெளியான அறிக்கையில், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் என ஆண்டுக்கான கட்டணமே பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பிற்கு குறைந்தபட்சமாக ரூ.67,900 , அதிகபட்சமாக ரூ.1,40,900 எனவும், 4 ஆண்டுகள் கொண்ட பொறியியல் படிப்பிற்கு குறைந்தபட்சமாக ரூ.79,000, அதிகபட்சமாக ரூ.1,89,800 எனவும், முதுகலை பொறியியல் படிப்பிற்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 , அதிகபட்சமாக 3,04, 000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டு கட்டணம் & அபராதம் :
இதைத் தவிர்த்து ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்ட அறிக்கையில், நடைமுறை காரணங்களால் ஒரு நிறுவனத்திற்கான கட்டணத்தை ஒழுங்குமுறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக மதிப்பாய்வு செய்யவோ அல்லது திருத்தவோ செய்யவில்லை என்றால் அந்நிறுவனம் ஆண்டிற்கு 5% அளவிற்கு அதிகரித்து கட்டணத்தை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக, எதிர்காலத்தில் கல்வி நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக மாணவர்களின் ஆண்டு கட்டணத்தில் 15% மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கலாம் எனத் தெரிவித்து உள்ளது.
அதேபோல், காலதாமதமாக கட்டணம் செலுத்தவது, ஒழுக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்கு மாணவர்களுக்கு அபராதம் விதிக்கலாம், இத்தகைய கட்டணங்கள் ஒரு சம்பவத்திற்கு ரூ.100க்கு மேல் இருக்கக்கூடாது எனக் கூறி இருப்பது அபராதம் விதிப்பதை அங்கீகரிப்பதாக அமைந்து உள்ளது.