This article is from Aug 28, 2020

ஏர்இந்தியா விமானத்தில் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் !

பரவிய செய்தி

ஏர்இந்தியா துவங்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு விமானத்திற்கு ஒரு முக்கிய நபரின் பெயர் சூட்டப்பட்டது. பேரரசர் ராஜேந்திர சோழன் பெயர் சூட்டப்பட்ட விமானம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சோழப் பேரரசர் ராஜேந்திரச் சோழனின் பெயர் ஏர்இந்தியா விமானத்தில் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தமிழ் சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. 1930-களில் ஜே.ஆர்.டி டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிறுவினார். சுதந்திர இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசாங்கம் அரசுடமையாக்கி ஏர்இந்தியா விமான சேவையை துவங்கியது.

ஏர்இந்தியா சேவையில் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கான புதிய விமானங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் வாங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. கொரோனா பாதிப்பால் விமானங்கள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1970களில் ஏர்இந்தியா போயிங் 747 ரக விமானங்கள் பயன்பாட்டிற்காக வாங்கியது. அன்றைய காலத்தில் வாங்கப்பட்ட முதல் போயிங் 747 ரக விமானத்திற்கு இந்தியப் பேரரசர் அசோகரின் பெயர் சூட்டப்பட்டது. 1976-ல் ஏர்இந்தியா பயன்பாட்டில் இருந்த போயிங் 747 விமானங்களுக்கு அசோகா, ராஜேந்திரச் சோழன், கனிஷ்கா, அக்பர், கிருஷ்ண தேவ ராயர் போன்ற பேரரசர்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். Airindiacollector மற்றும் indianairmails ஆகிய இணையதளங்களில் ஒவ்வொரு விமானத்தின் புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

2020 ஜூலை 21-ம் தேதி மும்பை மிரர் இணையதளத்தில் ” போயிங் 747 ” விமானம் குறித்து வெளியான கட்டுரையில், பேரரசர்கள் பெயர்கள் சூட்டப்பட்ட விமானங்களில் அவர்களின் சகாப்தம் குறித்த கலைப்படைப்புகள் உள்ளே இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரச் சோழன் பெயர் சூட்டப்பட்ட விமானம் பம்பாய் முதல் லண்டன் வரை பயணித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Twitter link | archive link 

2016-ல் மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திரச் சோழனின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டதா ?

ஏர்இந்தியா நிறுவனத்தின் விமானத்திற்கு சோழப் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் சூட்டி இருந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1970-களில் ஏர்இந்தியா பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட போயிங் 747 விமானங்களுக்கு பேரரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader