திமுக, காங்கிரஸ் மீதான அய்யாகண்ணுவின் குற்றச்சாட்டு உண்மையா ?

பரவிய செய்தி

மோடிக்கு எதிராக என்னைத் தூண்டி விட்டதே திமுக தான். அய்யாகண்ணு பகீர் குற்றச்சாட்டு !

மதிப்பீடு

சுருக்கம்

இது தொடர்பாக அய்யாகண்ணு அவர்களுக்கு Youturn தொடர்பு கொண்டு கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்திகள் உண்மை அல்ல என மறுத்துள்ளார்.

விளக்கம்

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய மோடி அரசுக்கு எதிராக போராடிய அய்யாகண்ணு திடீரென திமுக, காங்கிரஸ் கட்சியின் மீது பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளதாக சமூக வலைதளங்களிலும், சில இணைய பக்கங்களிலும் வெளியாகி உள்ளன.

அதில், விவசாயிகளை டெல்லி வரை சென்று போராட தூண்டியது, எங்களை முழுமையாக இயக்கியது திமுக, காங்கிரஸ் தான் என அய்யாகண்ணு கூறியதாகவும், டெல்லியில் பிஜேபி கட்சி தலைவர் அமித்ஷாவை சந்தித்த பிறகே இவ்வாறு பேசியுள்ளதாகவும் எழுதியுள்ளனர். மேலும், பிரபல செய்தி சேனல்களின் ப்ரேகிங் நியூஸ் போட்டோவில் ஃபோட்டோஷாப் செய்து இதே செய்தியை பகிரவும் செய்கின்றனர்.

அய்யாகண்ணு திமுக, காங்கிரஸ் மீது இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்து உள்ளார் என்ற செய்தி முக்கிய செய்தி சேனல்களில் ஒன்றில் கூட வெளியாகவில்லை. சில இணைய பக்கங்களில் செய்தி பிரிவில் எழுதி உள்ளனர்.

இது தொடர்பாக  youturn தரப்பில் இருந்து நேரடியாகவே அய்யாகண்ணுவை தொடர்பு கொண்டு பேசியதில், அவர் கூறிய தகவல்களை விரிவாக எழுதி உள்ளோம்.

”  நாங்கள் விவசாயிகள் எல்லாம் தங்களின் சொந்த செலவில் தான் டெல்லி சென்றோம் ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ்காரர்கள் காசுக் கொடுத்து எங்களை அனுப்பி வைத்ததா அப்பொழுதே பிஜேபிகாரர்கள் பேசினார்கள். என்னிடம் ஆடிக் கார், 300 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் கடன் இருப்பதாக கூறினார்கள். என்னிடம் ஆடிக் கார் இருந்தால் இலவசமாக எழுதிக் கொடுத்து விடுகிறேன் என்று நான் அப்பொழுதே சொன்னேன்.

நான் தனியாக எந்த முடிவும் எடுக்கிறதும் இல்லை.12-3-2019-ல் திருச்சியில் மாநில செயற்குழுவை கூட்டினோம். அதில், நதிகளை இணைக்க வேண்டும், லாபகரமான விலை தர வேண்டும், கடன் தள்ளுபடி, தனிநபர் இன்சூரன்ஸ், 60 வயது விவசாயிக்கு நிலம், மகன் இருந்தாலும் பென்சன் கொடுக்க வேண்டும்,  வெளிநாட்டில் இருந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய கூடாது, சிறு, குறு விவசாயிகள் என பாராபட்சம் பார்க்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை பிஜேபி, காங்கிரஸ் இரு கட்சிக்கும் அனுப்பி உள்ளோம்.

இதை நிறைவேற்றவில்லை என்றால் வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிடுவோம் என கூறி இருந்தோம். இந்நிலையில், பிஜேபி கட்சியின் தரப்பில் இருந்து எங்களை அழைத்தனர். டெல்லியில் அமித்ஷாவிடம் 9 பேர் சென்று பேசினோம். எங்கள் கோரிக்கையில் கடன் தள்ளுபடியை தவிர மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினர். 10-4-2019 பொதுக்குழு கூட்டத்தில், அவர்கள் கூறியது போன்று செய்யவில்லை என்றால் மீண்டும் டெல்லி சென்று போராட்டம் நடந்துவோம் என முடிவு செய்தோம். அது மட்டுமல்லாது, விவசாயிகள் எல்லாம் தாங்கள் விரும்புகின்ற கட்சிகளுக்கு வாக்கு செலுத்திக்கலாம் எனக் கூறியுள்ளோம்.

பலமுறை நாங்கள் கூறிவிட்டோம், திமுகவோ, காங்கிரசோ எங்களை டெல்லிக்கு அனுப்பி போராடச் சொல்லவில்லை. பிஜேபி ஆட்சிக்கு முன்பே டெல்லியில் போராட்டம் நடத்தி இருக்கோம். டெல்லியில் போராடிய போது பல அரசியல் தலைவர்கள் எங்களை வந்து சந்தித்தனர். அப்பொழுது தளபதி(ஸ்டாலின்) தமிழகத்திற்கு வருமாறு கூறினார். ஆனால், நாங்கள் அதனை ஏற்கவில்லை. இப்படி இருக்கையில்,  தற்போது சமூக வலைதளங்களில் நான் கூறியதாக போலியான செய்திகளை பரப்புகின்றன. இது தொடர்பாக நாளை திருச்சியில் உள்ள கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளேன் “.

சமூக வலைதளங்களில் திமுக , காங்கிரஸ் கட்சி மீது அய்யாகண்ணு குற்றச்சாட்டியதாக பரவும் செய்திகள் ஆதாரமற்றவை. அவர் அதுபோன்ற கருத்துக்களை கூறவே இல்லை என மறுத்து உள்ளார்.

Please complete the required fields.




Back to top button