பிரான்ஸை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் 2019ல் நடந்த அல்ஜீரியர்கள் போராட்ட வீடியோ

பரவிய செய்தி
(பாத்திரமறிந்து பிச்சையிடு) பாவம் பிரான்ஸ் நாடு, தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்க முயல்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 27 அன்று அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸில் நடைபெறும் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் கொடி பறப்பதைப் பாருங்கள், இஸ்லாமியர்கள் பிரான்ஸையும் ஆக்கிரமித்துமிட்டார்கள், இனியாவது இந்தியர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறி பாரிஸ் உள்ள குடியரசு சதுக்கம் (Republic Square Paris) பகுதியை போராட்டக்கார்கள் சூழ்ந்து இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#FranceRiots
Republic Square parisபாரிஸ் குடியரசு சதுக்கம் pic.twitter.com/u62TUZRnPd
— E Chidambaram. (@JaiRam92739628) July 5, 2023
பாரிஸ், பிரான்ஸ் தற்போதைய நிலை pic.twitter.com/XHQPaHFzje
— இராணுவச் செய்திகள் (@Defencetamil) July 5, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019-இல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
French-Algerians and Algerians living in France protesting against Bouteflika’s bid for a fifth term. Place de la République in Paris awash with Algerian flags and banners calling for a free and democratic Algeria. pic.twitter.com/agRZvbO3R3
— Selina Sykes (@Selina_Sykes) March 10, 2019
இதுகுறித்து France24 செய்தியின் ஊடகவியலாளரான Selina Sykes தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2019 மே 10 அன்று இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் “பிரான்சில் வசித்து வரும் பிரெஞ்சு-அல்ஜீரியர்கள் மற்றும் அல்ஜீரியர்கள், ஐந்தாவது முறையாக பூட்ஃபிலிகா அதிபராக முயற்சி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் சுதந்திரமான மற்றும் ஜனநாயக அல்ஜீரியாவுக்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளோடு அல்ஜீரியக் கொடிகள் நிரம்பி வழிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 மே 10 அன்று AFP News Agency தன்னுடைய யூடியூப் பக்கத்தில், “அல்ஜீரியாவில் பூட்ஃபிலிகாவின் ஐந்தாவது ஆட்சிமுறையை எதிர்த்து பாரிஸில் போராட்டம்” எனும் தலைப்பில் பரவி வரும் வீடியோவின் முழுத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவின் கீழே, “அல்ஜீரியக் கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தை ஆக்கிரமித்து, நோய்வாய்ப்பட்ட அல்ஜீரிய ஜனாதிபதியான அட்பெலாசிஸ் பூட்ஃபிலிகா ஐந்தாவது முறையாக பதவியேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பாரிசில் நடந்த போராட்டத்தின் படங்கள் இவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
கடந்த 2019 பிப்ரவரி 25 அன்று The Guardian இணையதளத்தில் வெளியான செய்தியில், “20 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ஐந்தாவது முறையாகவும் அதிபராக பதவியேற்க போகும் அட்பெலாசிஸ் பூட்ஃபிலிகாவுக்கு எதிராக மக்கள் கூட்டம் அல்ஜீரிய தலைநகரான அல்ஜியர்ஸ் உட்பட, நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பரவி வரும் வீடியோவில் இடம்பெற்ற கொடிகள் அல்ஜீரிய நாட்டின் தேசியக்கொடி.
மேலும் படிக்க : பிரான்ஸ் வன்முறையில் எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்
மேலும் படிக்க : பிரான்ஸ் கலவரத்தை தடுக்க யோகி ஆதித்யநாத்தை அழைத்ததாக பரப்பப்படும் ஐரோப்பிய மருத்துவரின் போலி ட்விட்டர் பதிவு
முடிவு :
நம் தேடலில், பிரான்ஸை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் வீடியோவானது 2019ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. அந்த வீடியோவில் இஸ்லாமியர்களின் கொடிகள் உள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவை அல்ஜீரியா நாட்டின் தேசியக்கொடிகள் என்பதையும் அறிய முடிகிறது.