This article is from Jun 08, 2019

உத்தரபிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை | பரவும் செய்திகள் உண்மையா ?

பரவிய செய்தி

ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் ஏன் இதைப் பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை ? இந்த சிறுமியின் வயது 3. பெயர் ட்விங்கிள். உத்தரப்பிரதேசம் அலிகாரில், ஜாகித் என்பவனால் கற்பழித்து, கண்களில் ஆசிட் ஊற்றி, கை கால்கள் சிதைத்து கொலை செய்யப்பட்டாள்.

மதிப்பீடு

சுருக்கம்

உத்தரப்பிரதேசம் சிறுமி கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு குறித்து குறிப்பிடவில்லை என்றும் அலிகார் காவல்துறை தெளிவுப்படுத்தி உள்ளது.

விளக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகாரின் டப்பால் பகுதியில் இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் உள்ளிட்ட பெரும்பாலான பதிவுகளில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கண்களில் ஆசிட் ஊற்றி, கை மற்றும் கால்களை சிதைத்து, எரித்து கொலை செய்து இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மே 31-ம் தேதி கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை தன்னுடைய பெண் குழந்தையை எங்கு தேடியும் காணவில்லை என்பதால் கடத்தப்பட்டு இருக்கலாம் என டப்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன்பிறகு, மூன்றாம் நாள் குழந்தையின் குடும்பத்தினர் தொடர்ந்து குழந்தையை தேடிக் கொண்டிருக்கையில் அப்பகுதிக்கு அருகே குப்பைகள் கொட்டும் இடத்தில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை :

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை தெரிவிக்கப்பட்டது. அதில், குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாக குறிப்பிட்டு உள்ளனர். எனினும், குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை என அலிகார் காவல்துறை ட்விட்டர் மூலம் ஜூன் 5-ம் தேதி தெரிவித்து இருந்தது.


குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு பற்றி குறிப்பிடவில்லை எனக் கூறிய அலிகார் எஸ்எஸ்பி ஆகாஷ் கூடுதலாக, பிரேதப் பரிசோதனை அறிக்கை குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாக கூறுகிறது. சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுவது போல் குழந்தையின் கண்களை பிடுங்கி, கை மற்றும் கால்கள் சிதைக்கப்பட்டதாக கூறுவது தவறு. உடலில் ஆசிட் ஊற்றியதாக கூறுவதிலும் உண்மை இல்லை. குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குழந்தையின் குடும்பத்தினரிடம் காண்பிக்கப்பட்டது ” என எஸ்எஸ்பி ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. அதில் , குழந்தையின் வலது கரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு பகிர்ந்தனர். ஆனால், கை துண்டிக்கப்பட்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்.

கொலைக்கான காரணம் ?

காவல்துறையினரின் விசாரணையில் குற்றவாளிகள் அஸ்லாம் மற்றும் ஜாகித் ஆகிய இருவரை கைது செய்தனர். அதில், ஒரு குற்றவாளி மீது அலிகார் மற்றும் டெல்லியில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


குழந்தையின் கொலை பணத்திற்காக நடந்து உள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளனர். குழந்தையின் குடும்பத்தினருக்கும், குற்றவாளி ஜாகித்-க்கும் இடையே பண பிரச்சனை காரணமாக கொலை நடந்து உள்ளது.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு 10 ஆயிரம் கடன் அளித்தவர்கள் கொலையை செய்துள்ளார். கடன் பிரச்சனையில் சிறுமியின் பெற்றோருடன் உண்டான சர்ச்சையில் இக்கொலையை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளனர்.

முடிவு :

குழந்தையின் கொலையில் பாலியல் வன்புணர்வு குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவில்லை, சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது போன்று எதுவும் நடக்கவில்லை என அலிகார் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களுக்கு கொலை சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளை கொல்லும் அளவிற்கு மனிதத்தன்மை இல்லாத சமூகம் உருவாகி விட்டது. ஒருபுறம் பாலியல் வன்புணர்வு செய்து குழந்தைகளை கொல்கிறார்கள், மறுபுறம் பணத்திற்காக கொல்கிறார்கள். கத்துவா சிறுமி வழக்கில் இன்று வரை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்பவருக்கு உரிய தண்டனை எப்பொழுது விரைவாக அளிக்கப்படும் என்பது கேள்விக்குறியே ?

Update :

கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் கொலையாளிகளில் ஒருவனான அஸ்லாம் என்பவன் தன் சொந்த குழந்தையையே பாலியல் வன்புணர்வு செய்தவன் என பேட்டி அளித்து இருந்தார். ஆகையால், குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மக்களிடையே எழுகின்றன.

கொலைக்கு துணையாக இருந்த அஸ்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ல் அலிகாரில் தன் மகளையே பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை செய்துள்ளார் என அவரின் மீது உறவினர்கள் புகார் அளித்து கைது செய்யப்பட்டுள்ளார். பின் சில மாதங்களிலேயே பிணையில் வெளியே வந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது. குழந்தையின் கொலை வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து இணைக்கப்படும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader