அனைத்து சாதி அர்ச்சகர் பூணூல் போட்டு இருக்கும் லட்சணம் என தவறாக பரப்பப்படும் செல்ஃபி புகைப்படம் !

பரவிய செய்தி

அனைத்து சாதி அர்ச்சகர் பூநூல்போட்டிருக்கும் லட்சணம். வலப்புறம் பூணூல் இருப்பது அசுப காரியங்களுக்கு மட்டுமே.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றவர் அசுப காரியங்களுக்கு போடுவது போன்று பூணூலை வலப்புறம் அணிந்து இருப்பதாகவும், பிற சாதியினர் எதற்காக பூணூல் அணிந்து இருக்கிறார்கள் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

நம்முடைய பதிவுகளின் கமெண்ட்களில் கூட இப்புகைப்படத்தை பதிவிட்ட வாசகர்கள் இதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டு இருந்தனர்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் பதிவுகளின் கமெண்ட்களில் இது செல்ஃபி புகைப்படம் என்பதால் தவறாக தெரிகிறது எனப் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், செல்ஃபி புகைப்படம் என்றால் அருகே இருப்பவரின் பூணூல் இடம் மாறி இருக்கிறே என பதிவிட்டவர்கள் பதில் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

Advertisement

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் தெளிவான படத்தை எடுத்து மிரர் செய்து பார்க்கையில் பூணூல் சரியாக இருப்பதை பார்க்க முடிந்தது. அதேபோல், அருகே நிற்பவர் பூணூல் அணிந்து இருப்பது தெரியவில்லை, அவர் மாலைகள் அணிந்து இருப்பதையே பூணூல் அணிந்து இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெண் ஒருவர் புடவை அணிந்து இருப்பது மாறி இருப்பதை பார்த்தாலும், வைரல் செய்யப்படுவது செல்ஃபி புகைப்படமே என அறிய முடிகிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது தொடர்பான பதிவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோக்களை தேடுகையில், புதியதலைமுறை செய்தியின் செய்தி கிடைத்தது.

புதியதலைமுறை செய்தியின் வீடியோவில் பணிநியமன ஆணை பெற காத்திருக்கும் அர்ச்சகர்களை வரிசையாக காண்பித்து கொண்டிருக்கையில், 2.54வது நிமிடத்தில் வைரல் புகைப்படத்தில் இருப்பவர்களை போன்ற இருவர் அருகருகே அமர்ந்து இருப்பதை பார்க்க முடிந்தது. உடை, மாலை, உடலில் விபூதி மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றை வைத்து பார்க்கையில், வைரல் புகைப்படத்தில் இருப்பவர்கள் இவர்களே என அறிய முடிந்தது.

இருவருமே வலப்புறத்தில் பூணூல் அணியவில்லை என்பதை தெளிவாய் பார்க்க முடிந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணை பெற்ற 58 பேர்களில் பிராமணர்களும் இருந்துள்ளனர். அது தெரியாமல், எதற்காக மற்ற சாதியினர் பூணூல் அணிந்து இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் ஆகியவர் பூணூலை தவறாக வலப்புறம் அணிந்து இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் செல்ஃபி புகைப்படம் என்றும், மிரர் இமேஜ் மற்றும் செய்தி வீடியோ மூலம் புகைப்படத்தில் இருக்கும் நபர் சரியான முறையில் தான் பூணூல் அணிந்து இருக்கிறார் என அறிய முடிந்தது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button