This article is from Oct 22, 2018

அலகாபாத் நகர் பிரயாக்ராஜ் ஆக மாறியது: பெயர் மாற்றம் முதல் முறை அல்ல!

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என யோகி ஆதித்யநாத் அரசு மாற்றம் செய்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

அலகாபாத் நகருக்கு புதிய பெயர் ஏதும் மாற்றவில்லை. அலகாபாத்தின் உண்மையான பெயரான பிரயாக் என்ற பெயரையே மீண்டும் வைத்துள்ளதாகவும், வரலாற்றை பற்றி அறியாதவர்களுக்கு இதுவே பதில் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது நிர்வாக தலைநகராக அலகாபாத் நகர் திகழ்கிறது. இந்நகரம் அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஹிந்து மக்கள் மதம் சார்ந்த முக்கியத்துவம் அளிக்க காரணம் அலகாபாத்தில் தான் சரஸ்வதி, யமுனா மற்றும் கங்கா நதிகள் சங்கமிக்கின்றன.

அலகாபாத்திற்கு “ பிரயாக்ராஜ் “ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு எடுத்தது முதலே எதிர் கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் பெயரை நீக்குவதன் அவசியம் ஏன் என்ற கேள்வியும் மக்கள் எழுப்புகின்றனர். அதற்கான பதிலை யோகி ஆதித்யநாத் அளித்துள்ளார்.

பிரயாக்ராஜ் :

“ பிரயாக்ராஜ் என அழைக்கப்பட்ட பகுதிதான் 500 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய ஆட்சிக்காலத்தில் அலகாபாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனித நதிகளான சரஸ்வதி, யமுனா, கங்கா ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் பிரயாக்ராஜ் என அழைத்துள்ளனர். நம் வரலாறு மற்றும் பாரம்பரியம் பற்றி ஏதும் அறியாதவர்களே கேள்வி எழுப்புகின்றனர் “ என தெரிவித்து இருந்தார்.

1575 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை பிரயாக் என்றழைக்கப்பட்ட பகுதியை மூன்றாம் முகலாய பேரரசர் அக்பர் “ இல்லஹாபாத் “ என மாற்றியுள்ளார். அதற்கு “ கடவுள் வாழும் இடம் “ என அர்த்தம். 1858-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் இப்பகுதிக்கு அலகாபாத் என பெயரிட்டு Agra மற்றும் oudh ஆகிய இரு பகுதிகளை இணைத்த மாகாணத்திற்கு தலைநகராக அறிவித்தது.

500 ஆண்டுகளாக இருந்து வந்த பெயரை மாற்றப்படுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அலகாபாத் பெயர் மாற்றம் முதல் முறையாக நடைபெறவில்லை. அந்நகரின் பெயர் மாற்றம் செய்ய ஏற்கனவே இருமுறை முயற்சித்து உள்ளனர். 1992 ஆம் ஆண்டிலும், 2001-ம் ஆண்டிலும் அலகாபாத் நகர் பெயர் பிரயாக் என மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்து, அதற்கு சாதகமாக முடிவு எடுத்தாலும் பலன் ஏதுமில்லாமல் இருந்தது.

ஆதித்யநாத்தின் முந்தைய பெயர் மாற்றங்கள் :

இதற்கு முன்பாக அம்மாநிலத்தில் பலமுறை பெயர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும், யோகி ஆதித்யநாத் எம்.பியாக இருந்த காலக்கட்டத்தில் உருது நகர்-ஹிந்து நகர், மியா நகர்- மாயா நகர், ஹுமாயுன் நகர்- ஹனுமான் நகர் என பல பகுதிகளுக்கு பெயரை மாற்றியுள்ளார். அவை அதிகார்பபூர்வமாக மாற்றப்படவில்லை என்றாலும் அவரின் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

2017-ல் உ.பி அரசு Mughalsarai நகரின் பெயரை Pandit Deendayal Upadhayaya நகர் என மாற்றினார். இதுபோல் பல இடங்களுக்கு பெயர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

யோகி ஆதித்யநாத் அரசு மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2012-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் அவர்களுக்கு முன்பிருந்த மாயாவதி ஆட்சியில் பெயரிடப்பட்ட 8 மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader