ஆந்திரா தலைநகருக்காக உயிரை தியாகம் செய்த விவசாயி என பரவும் தவறான வீடியோ.

பரவிய செய்தி
தலைநகர் அமராவதிக்காக உயிரை தியாகம் விவசாயி. தலைநகர் அமராவதியில் உள்ள கிராமத்தில் போலீஸ் போலியான வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் அமைக்கப்படும் என முன்பே அறிந்தது. இந்நிலையில், டிசம்பர் 17-ம் தேதி ஆந்திராவின் முதல்வர், மாநிலத்திற்கு மூன்று தலைநகரை அமைக்கும் தீர்மானத்தை அறிவித்ததார். மூன்று தலைநகர் அமைக்கும் முடிவுக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.
போராட்டத்தின் காரணமாக அமராவதி போலீசார் போலியான வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறி விவசாயி ஒருவர் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்று, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டதாக தெலுங்கு மொழியில் முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
தமிழகத்தில் நிகழ்ந்த தற்கொலை முயற்சி சம்பவத்தை ஆந்திராவில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகின்றனர். வீடியோவில் கீழே இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள் இரைச்சலால் புரியாமல் இருந்தாலும், ஒரு சில இடத்தில் தமிழில் வேண்டாம்.. வேண்டாம் என பேசுவதை கேட்க முடிந்தது. மேலும், வீடியோவின் இறுதியில் ட்ரான்ஸ்ஃபார்மர் கீழே ” TANGEDCO ” எனக் குறிப்பிட்டு இருக்கிறது.
ஆக, தமிழகத்தில் ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நபரைக் குறித்து தேடிய பொழுது, ” மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்ற ராணுவ வீரருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் பெண் வீட்டாரிடம் சக்தி குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சக்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் விசாரணைக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொழுது, சக்தி அப்பகுதியில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பொழுது தூக்கி வீசப்பட்டுள்ளார். அதன்பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ” ஜனவரி 7-ம் தேதி வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் ராணுவ வீரர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தமிழ் செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை வைத்து அமராவதியில் விவசாயி ட்ரான்ஸ்ஃபார்மரில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக பரப்பி வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.