அமர்நாத் குகையில் முதல் முறையாக சிவலிங்கத்துடன் செங்கோலும் பனியில் உருவாகியதாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
அமர்நாத் குகையில் இம்முறை ஈசனுடன் இணைந்து செங்கோலும் உருவாகி உள்ளது! அரிய காட்சி!
மதிப்பீடு
விளக்கம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பின்போது சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்பட்டது. அந்த செங்கோல் பற்றி பல்வேறு கருத்துக்களும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்து வந்த நிலையில் அதனைப் பற்றி விரிவான கட்டுரை ஒன்றினை யூடர்னில் வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அதீத பனியின் காரணமாக ஜம்மு காஷ்மீர், அமர்நாத்தில் உள்ள குகை ஒன்றில் சிவலிங்க வடிவில் பனி மேடு உருவாகும். இந்த பனி லிங்கத்தைப் பலரும் கடவுளாக வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டும் பனி லிங்கம் உருவாகிய நிலையில், லிங்கத்துடன் செங்கோலும் தோன்றியுள்ளதாக மத்தியப் பிரதேச, பசோடா தொகுதி பாஜகவின் பேஸ்புக் பக்கம் முதற்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர். மேலும் இதே தகவலை ‘Dharmic Indians’ என்ற டிவிட்டர் பக்கமும் பதிவிட, அதனை மதுவந்தியும் பகிர்ந்துள்ளார்.
உண்மை என்ன ?
அமர்நாத்தில் பனி லிங்கத்துடன் செங்கோல் தோன்றியதாகப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். ‘In feed’ என்னும் இணையதளத்தில் 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தின் போது கொரோனா தொற்றின் காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகச் செய்தி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. பனியால் உருவான செங்கோல் எனப் பரவக் கூடிய படம் போன்று அக்கட்டுரையிலும் காண முடிகிறது.
இதே போல் ‘THE BITTER TRUTH’ என்னும் தளத்தில் “First Darshan Baba Amarnath Barfani Ji 2019 Indian Army” என்ற தலைப்பில் சில படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் செங்கோல் என்று சொல்லக்கூடிய கொம்பு வடிவிலான உறைபனி உள்ளது.
மேலும், ‘Excelsior News’ யூடியூப் பக்கத்தில் 2019, ஜூன் மாதம் அமர்நாத்தில் பனியில் லிங்கம் தோன்றுவதாகக் கூறப்படும் குகையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதன் ஆரம்பத்திலேயே பரப்பப்படும் பனியிலான அமைப்பினை காண முடிகிறது.
மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில், கடந்த ஆண்டு (2022) மே மாதம் ‘ABP’ இணையதளத்தில் வெளியான செய்தியிலும் அத்தகைய படங்களைப் பார்க்க முடிகிறது. அமர்நாத் குகையில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களை ‘JAMMU LINKS NEWS’ என்ற டிவிட்டர் பக்கத்திலும், ‘Voice of katra’ என்ற பேஸ்புக் பக்கத்திலும் காண முடிகிறது. இவை இரண்டும் 2021ன் போது எடுக்கப்பட்டவை.
இவற்றைக் கொண்டு பார்க்கையில், செங்கோல் எனக் கூறப்படும் வடிவம் தற்போது முதன் முதலாக உருவானது அல்ல. கடந்த ஆண்டுகளில் உருவானது போலத்தான் இந்த ஆண்டும் கொம்பு வடிவிலான உறைபனி தோன்றியுள்ளது. அதைத்தான் இம்முறை செங்கோல் உருவானதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், இந்த ஆண்டு முதல் முறையாக அமர்நாத் குகையில் லிங்கத்துடன் செங்கோலும் பனியில் உருவாகி இருப்பதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. செங்கோல் எனப் பரப்பக்கூடிய கொம்பு வடிவிலான அமைப்பு, ஆண்டுதோறும் அங்கு தோன்றுகிறது என்பதை அறிய முடிகிறது.