அமேசானில் ரூ.2 லட்சம் சம்பளம், ஏமாற்றப்பட்ட மாணவர்.. தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

பரவிய செய்தி
9-ம் வகுப்பு மாணவனுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளமாம்… அமேசானுக்காக ஆஃப் தயாரிக்கும் மாணவன்..!
மதிப்பீடு
விளக்கம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் ஒருவர் செல்போனுக்கான மூன்று செயலிகளை உருவாக்கியுள்ளார். அதனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்துள்ளார் என நியூஸ் 7 தமிழ், பாலிமர், நியூஸ் 18 தமிழ்நாடு, சன் நியூஸ், தந்தி டிவி, Behindwoods போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக அமேசான் நிறுவனம் மாதம் இரண்டு ஆஃப்களை உருவாக்கித் தருமாறும், அதற்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
செல்போன் செயலி உருவாக்கித் தருவதன் மூலம் மாதம் 2 லட்சம் சம்பளம் என அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பள்ளி மாணவரை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். மாணவர் மைனர் என்பதால் அவரின் அடையாளங்கள் வெளியிடவில்லை.
செயலிகளை எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளீர்கள். நிறுவனங்கள் எப்படி உங்களைத் தொடர்பு கொண்டது. ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஏதேனும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதா என்பது தொடர்பான கேள்விகளை மாணவரிடம் முன்வைத்தோம்.
“முதலில் நான் உருவாக்கிய செயலிகளை Alpha என்னும் நிறுவனம் வாங்கியது. அது தொடர்பாக டெலிகிராமில் என்னைத் தொடர்பு கொண்டு செய்தியும் அனுப்பியது. அதில் ஒரு சான்றிதழும், எனது செயலிக்கான தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன தரப்பிலிருந்து எந்த தொகையும் இதுவரையில் எனக்குச் செலுத்தப்படவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கு எண்னைகூட அவர்கள் கேட்கவில்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில், “அமேசான் நிறுவனமும் என்னை டெலிகிராமில் தான் தொடர்பு கொண்டார்கள். மாதம் 2 செயலி உருவாக்கித் தந்தால் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறினார்கள். அவர்களுக்காக நான் எந்த செயலியையும் செய்யவில்லை. உண்மையில் அது அமேசான் நிறுவனம் தானா என்ற சந்தேகம் எழுகிறது. நான் சிறுவன் என்பதால் என்னை ஏமாற்றுகிறார்கள் என நினைக்கிறேன். இவை அனைத்தும் fake-ஆக இருக்கும் எனத் தோன்றுகிறது. தற்போது எனது டெலிகிராமும் வேலை செய்யவில்லை” என்றார்.
முதலில் அவரது செயலியை வாங்கியதாகக் கூறப்பட்ட நிறுவனம் அனுப்பிய செய்தியை யூடர்னுடன் பகிர்ந்தார். அதில், ‘Shy puzz’, ‘VID SHY’ ஆகிய செயலிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக உள்ள செயலியை அந்நிறுவனம் 486 அமெரிக்க டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அச்செய்தியில் உள்ளது. அத்தொகையானது இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000. ஆனால், அம்மாணவருக்கு எந்த பணமும் வழங்கப்படவில்லை. நிறுவனத்தின் தரப்பிலிருந்து பணம் அளிப்பது தொடர்பாக எந்த தகவலும் மாணவரிடம் கேட்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
டெலிகிராமில் வந்த ஒரு செய்தியை உண்மை என நம்பி மாணவர் ஏமாந்துள்ளார். அமேசான் நிறுவனம் எப்படி தொடர்பு கொண்டது? ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் என்ன? என்பது குறித்து எந்த தகவலையும் சரிபார்க்காமல் ஊடகங்களும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது என்பதை மாணவர் அளித்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
அமேசான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மை அல்ல. தான் சிறுவன் என்பதால் டெலிகிராமில் ஏமாற்றப்பட்டதாகவும், இதுவரையில் எந்த பணமும் தனக்கு வரவில்லை என்றும் அம்மாணவர் கூறினார்.