This article is from May 17, 2019

அமேசானில் விற்பனையாகும் கழிவறை உபகரணங்களில் மத அடையாளங்கள் !

பரவிய செய்தி

தற்போது அமேசான் நம் இந்து மத தெய்வங்களின் உருவப்படத்தை அவமதிக்கும் விதமாக கழிவறை உபகரணங்களில் சிவனின் படத்தை பதித்து விற்கின்றது.

மதிப்பீடு

சுருக்கம்

அமேசான் வர்த்தக தளத்தில் மத வழிபாடுகளின் அடையாளங்களை அவமதிக்கும் வகையில் கழிவறை உபகரணங்களில் ஒவ்வொரு மதங்களில் இருக்கும் கடவுள்களின் உருவங்கள், குறியீடுகள் ஆகியவற்றை அச்சிட்டு விற்றுள்ளனர். இதில், பல மதங்களும் அவமதிக்கப்பட்டு உள்ளதை பலரும் அறிந்திருக்கவில்லை

விளக்கம்

சமீபத்தில் அமெரிக்க வர்த்தக விற்பனை தளமான அமேசானில் கழிவறை உபகரணங்களில் சிவனின் உருவம் பதிக்கப்பட்டு விற்பனை செய்வதாக இடம்பெற்ற புகைப்படங்கள் நாடு முழுவதிலும் கண்டங்களை பெற்றது. மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இத்தகைய செயலை செய்துள்ளனர் என்று எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #boycottAmazon இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியது.

மேலும், அமேசானில் விற்பனையாகும் காலணிகள், தரை விரிப்புகள் ஹிந்து மத கடவுள்களின் உருவங்களுடன் இடம்பெற்றதால் அந்நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என ஆயிரக்கணக்காக அழைப்புகளை இந்திய ட்விட்டர் பயனாளர்கள் எழுப்பினர். மேலும், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ்க்கு டக் செய்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறி இருந்தனர்.

எனினும், அமேசான் தரப்பில் இருந்து இதற்கு உடனடி பதில்கள் ஏதும் வரவில்லை. இவ்வாறு நடப்பது முதல் முறையல்ல. 2017 ஆம் ஆண்டில் டோர்மேட்களில் இந்திய தேசிய கொடி பதித்து விற்கப்பட்டன. இதற்கு இந்திய அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

தற்போது, ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களை அவமதிக்கும் விதத்தில் கழிவறை உபகரணங்கள், யோகா மேட்கள், காலணிகள், தரை விரிப்புகளில் ஹிந்து மத கடவுள்களின் உருவத்தை பதித்து அமேசான் தளத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அமேசான் கிறிஸ்துவ அமைப்பின் தளம், ஆகையால் தான் ஹிந்து கடவுள்களை அவமதித்து உள்ளனர் என சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். ஆனால், அமேசான் தளத்தில் பல மதங்களின் அடையாளங்களை அவமதிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலின் படத்தை கழிவறை உபகரணங்கள், தரை விரிப்புகளில் பதித்து விற்பனை செய்துள்ளனர். இதற்கு சீக்கியர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதேபோன்று, இஸ்லாமிய மதத்தின் குறியீடுகளை கழிவறையின் உபகரணங்களில் பதித்தும் விற்பனை செய்துள்ளனர். மேலும், கிறிஸ்துவ மதத்தின் அடையாளங்களையும் அதே கழிவறை உபகரணங்கள், தரை விரிப்புகள், திரை சீலைகள் உள்ளிட்டவையில் பதித்து விற்பனை செய்துள்ளனர்.

இப்படி ஒவ்வொரு மதங்களின் கடவுள்கள், மத அடையாளங்களை அவமதிக்கும் வகையில் விற்பனையை அமேசான் நிறுவனம் நேரடியாக செய்யவில்லை என்றாலும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் இவ்வாறான அடையாளங்கள் உடன் பொருட்களை விற்பனை செய்வதை ஏன் கண்காணிக்கவில்லை என்ற கேள்வியும் உள்ளது. மேலும், எதிர்ப்புகள் எழுந்தும் உடனடியாக பதிலும் அளிக்காமல் இருந்துள்ளன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடித்தமானதாக இருக்கலாம். தனிப்பட்ட நபரின் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செய்யும் எந்தவொரு காரியமும் இழிவானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader