கொரோனா வழிமுறைகள் இல்லாமல் நடந்த அம்பானி பேரன் வரவேற்பு நிகழ்ச்சியா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்துள்ளதாக வெளியான புகைப்படம் ஊடகங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் வைரலாகின. பேரனிற்காக முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் குறித்த அச்சமின்றி எந்தவொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டதாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2.20 நிமிட வீடியோவில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமிதாப் பச்சன், அமீர்கான், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு இருப்பதை காண முடிகிறது.
உண்மை என்ன ?
முகேஷ் அம்பானி பேரன் வரவேற்பு விழா என பரவும் வீடியோ தேடுகையில், அது 2019 செப்டம்பர் மாதம் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்த விநாயகர் சதூர்த்தி விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி இந்தியன்எக்ஸ்பிரஸ்ஆன்லைன் யூடியூப் சேனலில் ” அம்பானி விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் ” என வெளியான 2.59 நிமிட வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க : பிரதமர் மோடி முகேஷ் அம்பானி பேரனைக் காணச் சென்றதாக பரவும் பழைய புகைப்படம் !
இதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பேரனைக் காண்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக மருத்துவமனைக்கே சென்றதாக பழைய புகைப்படத்தை வைரலாக்கினர். அதேபோல், முகேஷ் அம்பானியின் ஜியோ அரிசி, பருப்பு விற்பனைக்கு வந்தாக தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : JIO அரிசி, பருப்பு வந்து விட்டதா ?| இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா ?
முடிவு :
நம் தேடலில், முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்ததற்காக அவரது வீட்டில் கொரோனா வழிமுறைகள் இல்லாமல் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் விநாயகர் சதூர்த்தி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.