அம்பேத்கர் பேரன் தலித் இடஒதுக்கீட்டை நிறுத்தலாம் எனக் கூறினாரா ?

பரவிய செய்தி
தலித்துகளுக்கு அளித்துவரும் 70 வருட சலுகையால் நாடு சீரழிந்துள்ளது. இனி இது தேவையற்றது. எஸ்.டி கோட்டா-வை நீக்க வேண்டும். அம்பேத்கர் பேரன் ஆனந்த்ராஜ் அதிரடி.
மதிப்பீடு
விளக்கம்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பேரன் ஆனந்த்ராஜ், ” தலித்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை நிறுத்தி விடலாம் ” எனக் கூறியதாக முகநூலில் சில பதிவுகளின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றைக் காண நேரிட்டது.
அந்த ஸ்க்ரீன்ஷார்டை ஜெய்ஹிந்து என்ற முகநூல் கணக்கில் இருந்து இந்து சேனா எனும் முகநூல் குழுவில் பகிர்ந்து, ” அம்பேத்கர் பேரனே சொல்லிட்டார். பொது சிவில் சட்டம் கொண்டு வரணும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்தா, மதம் மாறாத ஏழை தாழ்த்தப்பட்ட மக்களும் படிச்சு முன்னேறுவாங்க ” என்று பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு நூற்றுக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ளது.
உண்மை என்ன ?
அம்பேத்கர் பேரன் கூறியதை அடுத்ததாக பார்க்கலாம், முதலில் படத்தில் இருப்பவர் அம்பேத்கர் பேரன் ஆனந்த்ராஜே இல்லையே. முகநூலில் பகிரப்படும் படத்தில் இருப்பவர், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர்.
அம்பேத்கர் பேரன் பிரகாஷ் யஷ்வந்த் இடஒதுக்கீட்டை நீக்கலாம் என யோசனைக் கூறியது, கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை அல்ல, தேர்தலில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டையே. அதையும் தற்பொழுது கூறவில்லை, 2014-ம் ஆண்டில் தெரிவித்து இருந்தார்.
2014-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ” தி ஹிந்து ” ஆங்கில செய்தியில், ” அரசியல் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரலாம். ஏனெனில், இப்பொழுதெல்லாம் தலித் வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், இன்றும் தலித் மக்கள் சமூகத்தில் பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதால் கல்வி, சேவை உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும் ” என யோசனைக் கூறியதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.
அம்பேத்கரின் மற்றொரு பேரன் ஆனந்த்ராஜ் ” குடியரசு சேனா ” என்றக் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் இடஒதுக்கீட்டை நிறுத்தலாம் என யோசனை கூறியதாக செய்திகளில் ஏதும் வெளியாகவில்லை.
அதேபோல், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் யஷ்வந்த் கூறிய யோசனையை மாற்றி இடஒதுக்கீடுக்கு எதிராக இருப்பது போன்று சித்தரித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் அரைகுறையான செய்திகள் மக்களுக்கு எப்படி செல்கின்றன என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.