சட்டப்பிரிவு 370-க்கு எதிராக அம்பேத்கர் கூறிய கருத்தா ? வைரலாகும் பதிவு !

பரவிய செய்தி

சட்டப்பிரிவு 370 மீதான அம்பேத்கர் பார்வை. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

மதிப்பீடு

விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நேரு காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் சட்டப்பிரிவு 370-க்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மக்களிடையே இரு தரப்புகள் உருவாகி உள்ள நிலையில், ஒரு பிரிவினர் சட்டமேதை அம்பேத்கர் சட்டப்பிரிவு 370-க்கு ஏற்கவில்லை என அவர் கூறியதாக ” கருத்து ” ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றன.

Advertisement

” இந்தியா உங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும், அவர் உங்கள் பகுதிகளில் சாலைகள் கட்ட வேண்டும், அவர் உங்களுக்கு உணவு, தானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் காஷ்மீர் இந்தியாவுக்கு சமமான அந்தஸ்தைப் பெற வேண்டும். ஆனால் இந்திய அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும், காஷ்மீரில் இந்திய மக்களுக்கு எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் திட்டத்தில் ஒப்புதல் அளிப்பது, இந்தியாவின் நலனுக்கு எதிரான துரோக காரியமாக இருக்கும், இந்திய சட்ட அமைச்சராக நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் ” என அம்பேத்கர் கூறியதாக ஆங்கில பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர்.

டாக்டர்.அம்பேத்கர் சட்டப்பிரிவு 370-க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவரா என்பது குறித்த தகவலை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் பிஜேபி முதல்வர் ரகுபர் தாஸ், இந்திய அரசியலமைப்பை கட்டமைத்த அம்பேத்கருக்கு சட்டப்பிரிவு 370-ல் உடன்பாடு இல்லை என தெரிவித்து இருந்ததாக செய்தியில் வெளியாகி உள்ளது.

2014-ல் இந்தியா டுடே-வின் ” Article 370: 10 facts that you need to know ” எனும் தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில், 3-வது வரியில் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சட்டப்பிரிவு 370-ஐ உருவாக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1949-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அரசியலமைப்புடன் அடங்கிய பொருத்தமான சட்டப்பிரிவை வடிவமைக்க அம்பேத்கருடன் கலந்துரையாடுமாறு காஷ்மீர் தலைவரான ஷேக் அப்துல்லாவிற்கு அறிவுறுத்தியதாகவும், இறுதியில் சட்டப்பிரிவு 370 ஆனது கோபாலசுவாமி அய்யங்கார் மூலம் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement

ஆனால், அங்கும் அம்பேத்கர் இணையத்தில் வைரலாகும் கருத்தை கூறியதாக இடம்பெறவில்லை. மேற்கொண்டு அம்பேத்கர் கூறியதாக உலாவும் கருத்து எங்கு இருந்து ஆரம்பித்தது என தேடுகையில், 2014-ல் தி ஹிந்து இணையதளத்தில் ” Row over Article 370 ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் வைரலாகும் கருத்து இடம்பெற்று இருந்தது.

” ஷேக் அப்துல்லாவிடம் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் கூறியது குறித்து பால்ராஜ் மாதோக் கூறியதை நினைவுக்கூர்வது சரியானது. இந்தியா உங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும் , அவர் உங்கள் பகுதிகளில் சாலைகள் கட்ட வேண்டும், அவர் உங்களுக்கு உணவு, தானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் காஷ்மீர் இந்தியாவுக்கு சமமான அந்தஸ்தைப் பெற வேண்டும். ஆனால் இந்திய அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும், காஷ்மீரில் இந்திய மக்களுக்கு எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் திட்டத்தில் ஒப்புதல் அளிப்பது, இந்தியாவின் நலனுக்கு எதிரான துரோக காரியமாக இருக்கும், இந்திய சட்ட அமைச்சராக நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” .சட்டப்பிரிவை விவாதித்தால் என்ன தவறு என்ற தகவல் செகேந்த்ராபாத்-ஐ சேர்ந்த டி.பிரபாகரன் ராவ் பெயரில் இடம்பெற்று இருந்தது.

மேலும், http://www.ambedkar.org என்ற தளத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்த கட்டுரையில், ” அம்பேத்கர் சட்டப்பிரிவு 370-க்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஷேக் அப்துல்லாவிடம் அம்பேத்கர் கூறியதாக பால்ராஜ் மாதோக் கூறிய தகவலும் இடம்பெற்று இருந்தது. எனினும், அங்கும் பால்ராஜ் மாதோக் பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது.

பால்ராஜ் மாதோக் என்பவர் யார் என்பது குறித்து தேடுகையில், ஜம்மு பகுதியின் அரசியல் தலைவர் என்ற தகவல் கிடைத்தது. பால்ராஜ் மாதோக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இடம்பெற்றவர். மேலும், பாரதீய ஜன சங்கம் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து அம்பேத்கர் கூறியதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான செய்திக்கு அவரின் வார்த்தைகளே பதிலாக இருக்கும் என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து அம்பத்கர் கூறியதாக பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக பதிவிட்டு இருக்கிறார். சட்டப்பிரிவு 370 குறித்து அம்பேத்கர் கூறியதாக ஆதாரமில்லாத பதிவை பகிர்வதாகவும், அம்பேத்கர் காஷ்மீர் பிரச்சனையில் முன்வைத்த இந்த தீர்வை ஏற்பார்களா என ” புரட்சியாளர் அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கை அவரது எழுத்துகளின் தொகுப்பு 14 பாகம் II இல் (ஆங்கிலம்) பக்கம் 1315 முதல் 1327 வரை ” என்ற புத்தகத்தை ஆதாரமாக வெளியிட்டு இருக்கிறார்.


முடிவு :

அம்பேத்கர் காஷ்மீர் சட்டப்பிரிவு 370-க்கு எதிரான கருத்தை காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் கூறியதாக பரவி வரும் பதிவின் தொடக்கமானது பால்ராஜ் மாதோக் இருந்தே என்பது கிடைத்த ஆதாரங்களில் தெரிகிறது.

அம்பேத்கர் சட்டப்பிரிவு 370-க்கு எதிரான அப்படியொரு கருத்தை கூறியதாக ஆதாரங்கள் இல்லை. அவரின் சொற்பொழிவு, உரையாடல் என எந்த ஆதாரமும் இல்லை.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button