அமெரிக்க கலவரத்தில் காவிக் கொடியா?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கட்டிடத்திற்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே புகுந்தனர். அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே நிகழ்ந்த போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை ஏந்திய புகைப்படங்கள் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது.
இந்நிலையில், அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே தொலைவில் காவி நிற கொடி மற்றும் அமெரிக்க கொடியுடன் நிற்பவரின் புகைப்படமானது இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அமெரிக்க போராட்டத்தில் காவி கொடியுடன் நின்றதாக பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு உலக அளவில் மக்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக வெளியான 2020 ஆகஸ்ட் 06-ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கேபிடல் பகுதிக்கு வெளியே ராமர் கோவில் பூமி பூஜையை இந்திய சமூகத்தினர் கொண்டாடுவதாக இப்புகைப்படம் வெளியாகி உள்ளது.
2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜையின் போது அமெரிக்காவின் கேபிடல் பகுதியில் காவி மற்றும் அமெரிக்க கொடியுடன் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.