அமெரிக்க டாலரில் அம்பேத்கரின் உருவத்தை அச்சிட்டதாகப் பரவும் எடிட் செய்த படம் !

பரவிய செய்தி
அமெரிக்க நாணயத்தில் டாக்டர் அம்பேத்கரின் அட்டைப் படம். கடந்த 15 வருட வரலாற்றில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில், உலகையே பாதித்த மாணவன், நம் இந்தியாவின் இனிய குழந்தை டாக்டர்!! பி.ஆர். அமெரிக்க அரசு அம்பேத்கர் என்று முடிவு செய்து அவர்களின் 100 டாலர் நோட்டில் அவரது உருவப்படத்தை அச்சிட்டது.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்கா டாலரில் சட்ட மேதை அம்பேத்கரின் உருவத்தை அந்நாட்டு அரசு அச்சிட்டு உள்ளதாக 100 டாலர் மதிப்பு கொண்ட பணத்தாளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்க டாலரில் பாபாசாகேப் அம்பேத்கர் படம் இந்தியாவின் தந்தை. 130கோடி மக்களுக்கு அரசியல் சட்டத்தின் வழியே பாதுகாப்பு. எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைத்திட சட்டத்தில் வழிவகை செய்திட்ட மாபெரும் தலைவர். இந்திய மக்களின் பணபிரச்சனை தீர ரிசர்வு வங்கி ஏற்படுத்தியவர். pic.twitter.com/vtYIaNxlVk
— கொட்டாங்கச்சி (@sumisakthi50) February 25, 2023
உண்மை என்ன ?
அமெரிக்க டாலரில் அம்பேத்கரின் உருவம் இடம்பெற்றது குறித்து தேடுகையில், இப்புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வருவதை பார்க்க முடிந்தது. செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, 2018ல் அமெரிக்க டாலரில் அம்பேத்கரின் படத்தை ஃபோட்டோஷாப் செய்து பரப்புவதாக டெக்கன் ஹெரால்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Uscurrency இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அந்நாட்டில் புழக்கத்தில் உள்ள 100 டாலர் நோட்டுகளில் பெஞ்சமின் பிராங்கிளின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. 1914 முதல் உள்ள 100 டாலர் நோட்டுகளில் பெஞ்சமின் பிராங்கிளின் புகைப்படமே வெவ்வேறு வடிவங்களில் மாறி உள்ளது. அவரைத் தவிர்த்து அந்நாட்டைச் சேர்ந்த அல்லது பிற நாட்டைச் சேர்ந்த எந்த தலைவர்களின் புகைப்படமும் இடம்பெறவில்லை.
அமெரிக்காவின் 100 டாலர்கள் நோட்டில் ஒருவரின் புகைப்படத்தை மாற்றி எடிட் செய்யக்கூடிய பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் அம்பேத்கர் படத்தை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என அம்பேத்கர் கூறியதாகப் பரப்பப்படும் ஆதாரமில்லா தகவல் !
மேலும் படிக்க : சட்டப்பிரிவு 370-க்கு எதிராக அம்பேத்கர் கூறிய கருத்தா ? வைரலாகும் பதிவு !
இதற்கு முன்பாக, அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி பரப்பப்பட்ட பல வதந்திகள் குறித்த உண்மைத்தன்மையை யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்க டாலர் பணத்தில் அம்பேத்கர் உருவம் அச்சிடப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.