கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இந்தியா நீக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமாக உள்ளதால் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாயை நீக்கி அமெரிக்கா அதிரடி.
மதிப்பீடு
சுருக்கம்
கடந்த 6 மாதங்களாக இந்தியா அன்னிய செலவாணியில் மேற்கொண்ட நடைமுறையை தொடருமேயானால் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும் என அமெரிக்காவின் கருவூலத்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
விளக்கம்
அமெரிக்க நாட்டின் வர்த்தக சந்தையில் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருக்கும் நாடு அமெரிக்காவின் கருவூலத்துறையின் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப்படும். இதன் அடிப்படையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி குறிப்பிடத்தக்க அளவிற்கு தொடர்வதாலும் மற்றும் இந்தியா அமெரிக்க டாலரை அதிகம் வாங்கியது போன்றவற்றாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா.
17 அக்டோபர் 2018-ல் அமெரிக்காவின் கருவூலத்துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட இந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், அன்னிய செலவாணியில் கடந்த 6 மாதங்களாக இந்திய அன்னிய செலவாணியில் மேற்கொண்ட நடைமுறையை தொடர்ந்தால் அடுத்த BI-Annual report-ல் இருந்து இந்தியா நீக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
“ இந்தியாவின் சூழ்நிலைகள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் கண்டுள்ளது, 2018-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மத்திய வங்கியின் அன்னிய செலவாணியின் நிகர விற்பனையை, 2018-ம் ஆண்டின் ஜூன் மாதத்தின் நான்காம் காலாண்டின் நிகர கொள்முதல் மூலம் 4 பில்லியன் டாலர்(29,408 கோடி) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP-ல் 0.2 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது “ என Macroeconomic and foreign exchange என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் கருவூலத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்டு வந்த அன்னிய செலவாணி நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வராமல் தொடர்ந்து அதையே கடைபிடித்து வந்தால் அடுத்த ஆறு மாதங்கள் கழித்து வெளியாகும் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும், தற்போது கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இந்தியா நீடித்து வருகிறது. அதற்குள் இந்தியா நீக்கப்பட்டு விட்டது என செய்திகள் வெளியாகி வருகிறது. இந்தியாவின் அன்னிய செலவாணி நடைமுறையால் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இந்தியா தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது அடுத்து வெளியாகும் அறிக்கையை வைத்தே உறுதியாக கூற முடியும்.