அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !

பரவிய செய்தி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

யோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து 23-ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவில் பக்தர்களின் பொது தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், யானை வாகனம், சிங்க வாகனம் உட்பட பல்வேறு தங்க வாகனங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதற்கு முன்பும் இதே வீடியோ, ‘திருப்பதி தேவஸ்தானத்திற்கு NRI அமெரிக்கர்கள் வழங்கிய தங்க வாகனங்கள்‘ என்று கூறி கடந்த 2023 லேயே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.

ஆனால் உண்மையில், இது அயோத்தி ராமர் கோவில் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தோடு தொடர்புடைய வீடியோ அல்ல. தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் (Bhadradri Kothagudem) மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் ராமர் கோவிலில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. 

இதனை, அமெரிக்காவில் உள்ள NRI இந்தியர்கள், “NRI வாசவி சங்கம், USA” என்ற NGO மூலம் பத்ராசலம் ராமர் கோவிலுக்கு 12 தங்க வாகனங்களை தானமாக வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டு V6 News Telugu என்ற யூடியூப் சேனலில் 2023 மார்ச் 21 அன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்று, ‘News 18 தெலுங்கு‘ கடந்த 2023 ஜனவரி 25 அன்று “பத்ராத்திரி: ராமருக்கு புது வாகனங்கள்.. அழகு திருவீதி சேவை” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தெற்கு அயோத்தி என்று அழைக்கப்படும் பத்ராசலம் ஸ்ரீ சீதாராமச்சந்திரசுவாமி தேவஸ்தானத்தில் (பத்ராசலம் கோயில்), சுவாமியின் திருவீதி சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வரவுள்ளன.

புதிய வாகனங்களை வழங்க அமெரிக்காவின் வாசவி சங்கம் முன் வந்துள்ளது. கருடன், ஹனுமத், சேஷ சூர்யபிரபை, சந்திரபிரபை, ஹன்ஸ, அஸ்வ, கல்ப விருக்ஷ சர்வபௌமா, தங்க சிம்மாசனம், கஜ, சிம்ம வாகனங்கள் ஆகியவை வெண்கலத்தால் செய்யப்பட்டவை. சில தங்க முலாம் பூசப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ தெலங்கானாவில் உள்ள பத்ராசலம் ராமர் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதையும், வீடியோவில் உள்ள பல வாகனங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிகிறது. 

மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் பணம் போடும் வீடியோ எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோயில்!

மேலும் படிக்க: முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரவும் போலி வீடியோ !

முடிவு: 

நம் தேடலில், அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 12 தங்க வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன என்று கூறி பரவும் வீடியோ தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader