இந்திய வரைபடத்தை அமெரிக்கன் சிஇஓ மறுவடிவமைத்ததாக பரவும் பழைய வரைபடம் !

பரவிய செய்தி
இந்தியாவை நிர்வகிப்பது என்பது 50 நாடுகளை நிர்வகிப்பது போல.. இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையைக் குறித்து ஓர் அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரியால் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்திய வரைபடமாகும். இது சில நாடுகளின் மக்கள் தொகைக்கு கிட்டத்தட்ட சமம். பல நாடுகளின் கோவிட்-19 நிலைமையை இந்தியா மறைமுகமாகக் கையாளுகிறது என்பதை அவர் தனது ஊழியர்களுக்கு விளக்க முயற்சித்து உள்ளார். இது சிக்கலை திறமையான முறையில் நிர்வகிப்பது பற்றியது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு என்பது பல சிறு நாடுகளை உள்ளடக்கும் அளவிற்கு பெரியது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.
இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை அளவிற்கு சமமான பிற நாடுகளை ஒப்பிட்டு கோவிட்-19 நெருக்கடியில் இந்தியா எப்படி சமாளிக்கிறது என்பதை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சிஇஓ ஒருவர் தனது ஊழியர்களுக்கு விளக்கி கூறியதாக மேற்காணும் புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கோவிட்-19 தொடர்பாக இந்திய வரைபடத்தை அமெரிக்க சிஇஓ மறுவடிவமைப்பு செய்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் அல்லது செய்தி ஏதும் இல்லை. வைரல் செய்யப்படும் வரைபடம் சமீபத்தியவை அல்ல, 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
Thought provoking map! –> “Indian states mapped to countries of equivalent population” #map #population pic.twitter.com/NDzMXA0Rj9
— Amit Ranjan (@amitranjan) April 13, 2016
2016-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அமித் ரஞ்சன் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட இந்திய வரைபடத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. எனினும், அதில் அந்த வரைபடத்தை வரைந்தது யார் என்ற விவரங்கள் இல்லை.
India population now at 1250 mill.
Look at this map – India is not just another country – it’s enormous! pic.twitter.com/IKn4Q4BY10— Erik Solheim (@ErikSolheim) April 29, 2016
வைரல் செய்யப்படும் இந்திய வரைபடத்தினை உருவாக்கியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அத்தகைய வரைபடத்தில், இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையும், அதற்கு சமமான மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பெயர்களும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு உள்ளன. 4 ஆண்டுகள் பழைய வரைபடத்தினை கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்துடன் தொடர்புப்படுத்தி வைரல் செய்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நம்முடைய தேடலில் இருந்து, கோவிட்-19 நெருக்கடியில் அமெரிக்காவைச் சேர்ந்த சிஇஓ இந்திய வரைபடத்தை மறுவடிவமைப்பு செய்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.