This article is from Oct 01, 2018

அமெரிக்காவில் மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ஆசிரியர் சாந்தி.

பரவிய செய்தி

அமெரிக்காவில் புளோரிடா மாகாண பள்ளி துப்பாக்கி சூட்டின் போது பல மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளி பெண்.

மதிப்பீடு

சுருக்கம்

துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த போது அப்பள்ளியில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியர் சாந்தி பல மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

விளக்கம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலை பள்ளியில் பிப்ரவரி 14-ம் தேதியன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்த்தை நிகழ்த்தியது அப்பள்ளியின் முன்னாள் மாணவன் நிகோலஸ் க்ருஸ். பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த நிகோலஸ் AR-15 ரக துப்பாக்கியால் 15 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 17 பேரைக் கொன்றுள்ளான்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பள்ளியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் பயில்கின்றனர். அப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் 22,000க்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பள்ளியில் இந்திய வம்சாவளி ஆசிரியர்களும், குழந்தைகளும் அதிகம்.

எதிர்பாராமல் நடைபெற்ற இக்கொடுரச் சம்பவத்தின் போது அப்பள்ளியில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியர் சாந்தி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற தருணத்தில் சாந்தி விஸ்வநாதன் தனது வகுப்பில் அல்ஜீப்ரா கணக்குகளை நடத்தியுள்ளார். இந்நிலையில், பள்ளிக்குள் நுழைந்த நிகோலஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அபாய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த சாந்தி விஸ்வநாதன் மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து கதவுகளை உட்புறமாக மூடியுள்ளார். அடுத்து கையில் கிடைத்த பேப்பரை வைத்து ஜன்னல்களை மறைத்து, குழந்தைகளை குப்புறப்படுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இவர்கள் இருந்த வகுப்பறை கதவுகள் பூட்டப்பட்டதால் கொலையாளியால் அந்த வகுப்பறைக்குள் செல்லமுடியவில்லை.

இச்சம்பவம் அறிந்து விரைந்த அதிரடிப்படையினர் ஒவ்வொரு அறையாக வந்து குழந்தைகளை மீட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு அறையின் கதவு மட்டும் உட்புறமாக பூட்டப்பட்டதை கண்டு உள்ளே தாக்குதல் நடத்தியவர் இருக்கக்கூடும் என்று சந்தேகமடைந்தனர்.

கதவை உடைத்து உள்ளே வரவா என்று அதிரடிப்படையினர் கூறிய பின்பு பேசிய சாந்தி, குழந்தைகளை பாதுகாத்து கொண்டு இருப்பதாகக் கூறினார். இதனால், கதவை உடைக்காமல் ஜன்னலை உடைத்து வருவதைக் கண்டு கதவுகளை திறந்துள்ளார் சாந்தி விஸ்வநாதன். இதன் பின் உள்ளே வந்த அதிரடிப்படையினர் குழந்தைகளையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 17 பேரை கொன்று விட்டு தப்பித்து சென்ற முன்னாள் மாணவனை, 40 நிமிடங்களுக்கு பிறகு பக்கத்து நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். நார்த் ப்ரோவர்ட் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் வந்து சந்தித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் சாந்திக்கு குழந்தைகளின் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இச்சம்பவத்தில் இறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதாகவும் கூறியுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader