அமீர்கான் ஏழைகளுக்கு கோதுமை மாவில் ரூ15,000 வைத்து கொடுத்தாரா ?

பரவிய செய்தி
ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15,000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! வாழ்த்துகள் சகோதரா. பாராட்ட நினைத்தால் பகிருங்கள் !
மதிப்பீடு
விளக்கம்
ஏப்ரல் 23-ம் தேதி இரவு ட்ரக்கில் வந்தவர்கள் ஒரு கிலோ கோதுமை மாவு இலவசமாக வழங்குவதாக கூவினர், வசதி இருப்பவர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால், ஏழை மக்கள் வரிசையாக வாங்கிச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதை திறந்து பார்க்கையில் ஒவ்வொரு கோதுமை மாவு பாக்கெட்டிலும் 15,000 ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதைச் செய்தது நடிகர் அமீர்கான் எனும் தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழில் பரவும் பதிவுகளில், டெல்லி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவு பாக்கெட்களில் 15,000 வைக்கப்பட்டு இருந்ததாக பரவுகிறது. ஆனால், இந்தியில் பரவும் பதிவுகளில் மும்பை பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக யூடியூப், டிக்டாக் உள்ளிட்டவையில் கூறி வருகிறார்கள். ஆக, அமீர்கான் வைத்து பரப்பப்படும் தகவலில் சம்பவம் எங்கு நிகழ்ந்தது என சரியான விவரம் இல்லை. அதுவே முதல் முரண்பாடு.
கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதற்கு பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிராவின் முதல்வர் நிவாரண நிதிக்கும் அமீர்கான் நிதியுதவி அளித்து உள்ளார். இதையெல்லாம் தவிர்த்து, அடுத்து வரவுள்ள தனது படமான லால் சிங் சதாவில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளர்களுக்கும் நிதி ஆதரவை வழங்க உள்ளார் என ஏப்ரல் 8-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஆனால், அமீர்கான் ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் மறைத்து வைத்து வழங்கியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. இது தொடர்பாக IANS நிறுவனம் அமீர்கான் தரப்பை தொடர்பு கொண்ட பொழுது பதில் ஏதும் அளிக்கவில்லை. அமீர்கான் குறித்து பரப்பப்படும் தகவல் தொடர்பாக அவரிடம் இருந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. அமீர்கான் உதவும் குணம் கொண்டவராக இருந்தாலும், அவரை வைத்துப் பரப்பப்படும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்பதை அறிய முடிகிறது.
இந்த செய்தி எங்கிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியாது. ஆனால், நடிகர் அமீர்கான் பெயர் இணைக்கப்பட்ட பிற இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் பரவி இருக்கின்றன.
குஜராத் சம்பவம் :
கீழ்காணும் டிக்டாக் வீடியோவில், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவு பாக்கெட்களில் 15,000 ரூபாய் இருந்ததாக கூறி இருப்பார். இந்த டிக்டாக் வீடியோவும் இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், இதில் அமீர்கான் பெயர் இடம்பெறவில்லை.
khansaheb என்பவரின் டிக்டாக் பக்கத்தில் வெளியான வீடியோவில், ஏழை மக்களுக்கு பண உதவி வழங்கப்பட்ட இடத்தின் விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கும். ஆனால், பிற பதிவுகளில் அப்படி ஏதுமில்லை. மேற்காணும் வீடியோவில், குஜராத் மாநிலத்தின் சூரத் அருகே உள்ள ராண்டெர் நகரத்தில் சம்பவம் நிகழ்ந்தது என கூறி இருப்பார்.
இதையடுத்து, ராண்டெர் காவல் நிலையத்திற்கு யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” அப்படியொரு சம்பவம் அங்கு நிகழ்ந்ததாக கூறினர். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ட்ரக்கில் வந்தவர்கள் ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்களை வழங்கினார்கள். அதில், பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உதவியை செய்தது யார், ட்ரக் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர். அது தொடர்பான கட்டுரையை கீழே உள்ள லிங்கில் விரிவாக படிக்கவும்.
விரிவாக படிக்க : ஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கப்பட்டதா ?
மேலும், அமீர்கான் புகைப்படத்துடன் இணைத்து பகிரப்படும் மாவில் இருக்கும் பணத்தின் புகைப்படங்கள் மற்றும் அமீர்கான் பெயர் குறிப்பிடாமல் டிக்டாக் போன்றவற்றில் இடம்பெறும் பணத்தின் புகைப்படங்களும் அதை பகிர்பவர்கள் மூலம் எடுத்து பரப்பப்படுபவை.
நமது தேடலில், அமீர்கான் கோதுமை மாவு பாக்கெட்களில் 15,000 பணத்தை மறைத்து வைத்து ஏழை மக்களுக்கு வழங்கியதாக கூறும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை. ஆதாரமில்லாமல் சமூக ஊடகத்தில் மட்டுமே அப்படியொரு தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், சூரத் அருகே ராண்டெர் எனும் பகுதியில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதியின் காவல்துறை தெரிவிக்கிறது. எனினும், ஏழை மக்களுக்கு உதவியர்கள் யார் எனத் தெரியவில்லை என்பதையும் அறிய முடிகிறது.