பிரதமரின் இலவச வீடு பயனாளி என ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புகைப்படத்தைப் பதிவிட்ட அமித்ஷா !

பரவிய செய்தி

பிரதமர் மோடி வாக்குறுதிகளை அறிவிக்க மட்டுமல்ல, அதனை நிறைவேற்றமும் செய்வார். டெல்லியில் 3024 குடிசைவாசிகளுக்கு இன்று இலவச வீடுகள் பிரதமர் மோடியால் வழங்கப்பட உள்ளது -அமித் ஷா

Twitter Link | Archive Link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 3024 இலவச வீடுகளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி 2022 நவம்பர் 2ம் தேதி அன்று பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து அமித்ஷா மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

Twitter Link | Archive Link

ஆயிரக்கணக்கான நிலமற்ற குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வீடு வழங்க உள்ளார் என் டெல்லி பாஜக வின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அமித்ஷா மற்றும் டெல்லி பாஜக பதிவில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்டிருந்தது. பிரதமர் மோடியின் இலவச வீடு பயனாளியாக அந்தக் குடும்பம் காட்டப்பட்டிருந்தது.

உண்மை என்ன ?

அமித்ஷா மற்றும் டெல்லி பாஜகவின் ட்விட்டர் பதிவில் இருந்த அந்தக் குடும்பத்தின் புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்த்ததில் பதிவில் இருந்த புகைப்படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது.

புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் சாரு பிரையர்லி(Saroo Brierley) என்பதும், இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் என்பதும் தெரியவந்தது.

மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வ எனும் இடத்தில் பிறந்த சாரு பிரையர்லி தனது 5வது வயதில் தவறாக ரயிலில் ஏறி கல்கத்தா சென்றுள்ளார். அங்கிருந்து ஆஸ்திரேயாவைச் சேர்ந்த ஒரு தம்பதி அவரைத் தத்தெடுத்தனர். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த சாரு பிரையர்லி 2013ம் ஆண்டு Google Earth மூலம் தனது பிறந்த ஊரை கண்டுபிடிக்கிறார். தன்னுடைய குடும்பத்தைக் காண இந்தியா வந்த சாரு பிரையர்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

இதுகுறித்து, லைவ் மின்ட் செய்தித்தளம் True Stories | Such a long journey எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மற்றும் டெல்லி பாஜக பயன்படுத்தியுள்ள புகைப்படம் அதில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வளர்ந்த சாரு பிரையர்லி இந்தியாவில் தனது குடும்பத்தை மீண்டும் சந்தித்தது குறித்து A Long Way Home: A Memoir எனும் புத்தகத்தை 2013ம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.

A Long Way Home: A Memoir புத்தகத்தைத் தழுவி Lion என்ற படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது. Lion படம் ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தி பெட்டெர் இந்தியா தளம் Dev Patel’s ‘Lion’ Tells The True Story Of a Boy Who Used Google Earth To Find His Long Lost Family எனும் தலைப்பில் 2016ம் ஆண்டுக் கட்டுரை வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க : டெல்லியில் பாஜக யாத்திரை விளம்பரங்களில் தமிழ் எழுத்தாளரின் புகைப்படம் !

2021ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் யாத்திரை தொடர்பான விளம்பரங்களில் தமிழ் எழுத்தாளரின் புகைப்படத்தை பாஜகவினர் தவறாகப் பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், ஆஸ்திரேலிய எழுத்தாளர் சாரு பிரையர்லி மீண்டும் தனது சொந்தக் குடும்பத்தை இந்தியாவில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பிரதமர் மோடியின் இலவச வீட்டுப் பயனாளி என அமித்ஷா மற்றும் டெல்லி பாஜக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader