போலி என்கவுண்டர் வழக்கில் கைதான பாஜக தலைவர் அமித் ஷா!

பரவிய செய்தி
சோரபுதீன் கொலை வழக்கில் 2010-ல் அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையில் இருந்தார்.
மதிப்பீடு
சுருக்கம்
போலியான என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சோரபுதீன் வழக்கில் கைதாகிய அமித் ஷா மூன்று மாதங்களுக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். பின்னாளில் வழக்கின் முடிவு அமித் ஷாவிற்கு சாதகமாக முடிந்தது.
விளக்கம்
பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா 2002-ல் குஜராத்தின் அகமதாபாத்தின் சர்கேஜ் தொகுதியில் 1.58 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார். அன்றைய தேர்தலில் பிரதமர் மோடி வாங்கிய ஓட்டுகளை விட அமித் ஷா வாங்கிய ஓட்டுகள் அதிகம்.
சோரபுதீன் என்கவுண்டர் வழக்கு :
சோரபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மார்ஃபில் வணிகம் செய்பவர்களிடம் அராஜகமாக மிரட்டி பணம் பெறுபவர்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஆயுதக் கடத்தல் விவகாரத்திலும் தொடர்பு இருப்பதாகவும், மார்ஃபில் வணிகமே அவரின் இறப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
2005-ம் ஆண்டு நவம்பர் சோரபுதீன் ஷேக் மற்றும் அவரின் மனைவி குசெர் பி ஆகியோர் ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சங்கலி என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டு இருக்கும் போது ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் காந்தி நகர் என்ற பகுதியில் அவர்களை மறித்து பிடித்துள்ளனர். நவம்பர் 26-ம் தேதி என்கவுண்டர் மூலம் சோரபுதீனை சுட்டுக் கொன்றுள்ளனர். நவம்பர் 28-ம் அவரின் மனைவி கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
குஜராத் போலீஸ் முதலில் சோரபுதீன் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாலிபா மூலம் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் சோரபுதீன் போலியான என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது.
இதன் பிறகு போலீசாரின் காவலில் இருந்த துளசிராம் பிரஜாபதி டிசம்பர் 2006-ல் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றாக கூறி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமித் ஷா கைது :
சோரபுதீன் வழக்கில் முதலில் டி.ஐ.ஜி டிஜி வன்சாரா மற்றும் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி தினேஷ் ஆகியோர் கைதாகினர். குற்ற வழக்கின் விசாரணையில் வன்சாரா, தினேஷ், எஸ்.பி ராஜ்குமார் பாண்டியன், விபுல் குமார் மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு இடையே செல்போன் அழைப்புகள் அதிகமாக இருந்ததை அறிந்தனர்.
சிபிஐ தாக்கல் செய்த 30,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையில் அமித் ஷா மற்றும் 14 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றது. 2010-ல் ஜூலை 25-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனால் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா பதவி விலகினார். மூன்று மாதங்கள் விசாரணைக்காக சிபிஐ காவலில் இருந்தார் அமித் ஷா. ஆனால், ஆகஸ்ட் 31-ம் தேதி உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிபந்தனை ஜாமீன் :
அக்டோபர் 2010-ல் சிபிஐ விசாரணையில் இருந்த அமித் ஷாவிற்கு குஜராத் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது. 1 லட்சம் ஜாமீன் தொகையும், மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மூன்று வாரங்களுக்கு வாரம் ஒரு முறையும் மற்றும் அதன்பின் மாதம் ஒருமுறை சென்று அறிக்கை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
வழக்கில் இருந்து விடுதலை :
சோரபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோரின் போலியான என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவிற்கு எதிராக ஆதாரங்கள் ஏதுமில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2014-ல் அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தது.
குற்றச்சாட்டுகள்: கொலை, குற்றவியல் சதி, தவறாக காவலில் வைத்திருத்தல், கடத்துதல் மற்றும் கொலை செய்வதற்காக கடத்துதல், ஆதாரங்களை கடத்துதல் மற்றும் அழித்தல்.
காலவரிசை (2014 வரை):
நவம்பர் 23, 2005: குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு குழு சோரபுதீன் ஷேக், மனைவி கவுசர் பி மற்றும் உதவியாளர் துளசிம் பிரஜாபதி ஆகியோர் மீது குற்றம் சாட்டினர் .
நவம்பர் 26: சோரபுதீன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் .
நவம்பர் 28: கவுசர் பி கொல்லப்பட்டார்.
டிசம்பர் 28, 2006: சப்ரி கிராமத்தில் பிரஜாபதி கொல்லப்பட்டார்.
ஜனவரி 12, 2010: உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
ஜூலை 23: அமித் ஷா முக்கிய குற்றவாளி என சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜூலை 25: அமித் ஷாவை சிபிஐ கைது செய்தது.
அக்டோபர் 29: குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
செப்டம்பர் 27, 2012: உச்சநீதிமன்றம் வழக்கை குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றியது.
ஏப்ரல் 8, 2013: உச்சநீதிமன்றம் பிரஜாபதி வழக்கை சோரபுதீன் வழக்குடன் சேர்த்தது.
டிசம்பர் 30, 2014: உச்சநீதிமன்றம் வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுதலை செய்தது.
சோரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிற்கு சாதகமாகவே இருந்தது. வழக்கில் விடுதலை பெற்றாலும் விடையற்ற கேள்விகள் பல எழுப்பப்பட்டுக் கொண்டே உள்ளது.!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.