அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியத்தை உ.பி அரசு அறிவித்ததா?

பரவிய செய்தி
ஒரு ஏழை குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு உதவிய உபி அரசை பாராட்டுகிறேன். சிறந்த கலைச் சேவைக்காக அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் பென்சன் உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு.
மதிப்பீடு
சுருக்கம்
அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்குவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தியில் வெளியான தகவலானது 2019-ல் இருந்து தவறான பார்வையில் பகிரப்பட்டு வருகிறது. மாநில அரசு எதற்காக பென்சன் வழங்குவதாக அறிவித்தது மற்றும் அதற்கு அமிதாப்பச்சன் அளித்த பதில் குறித்து தொடர்ந்து படிக்கவும்.
விளக்கம்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு தலா 50,000 என ரூ2 லட்சம் ஓய்வூதியம் வழங்க உத்தரப் பிரதேச அரசு அறிவித்து இருப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் பக்கத்தை வைத்து கிண்டல் மீம்கள் மற்றும் கண்டனப் பதிவுகள் ஏராளமாய் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச அரசு அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு பென்சன் வழங்குவதாக வெளியான செய்தி குறித்து தேடிய பொழுது, ” 2015-ல் வெளியான இந்தியா டுடே, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்டவையின் செய்திகள் நமக்கு கிடைத்தன. 2015-ல் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு , யஷ் பாரதி விருது பெற்றதால் அமிதாப்பச்சனின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் தொகையாக தலா 50,000 வழங்குவதாக அறிவித்து இருந்தது.
விருது மற்றும் பரிசுத் தொகை :
1994-ல் முலாயம் சிங் யாதவ் ஆட்சியில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கலை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய நபர்களுக்கு ” யஷ் பாரதி சம்மன் ” எனும் விருது வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்தகைய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. முதலில், அமிதாப்பச்சனின் தந்தைக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர், அமிதாப்பச்சன் மற்றும் ஜெயாபச்சனுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக, 2006-ல் அபிஷேக் பச்சனுக்கு யஷ் பாரதி விருது வழங்கி உள்ளனர்.
ஆனால், இத்தகைய திட்டம் மாயாவதி முதல்வராக இருந்த சமயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், உபி-யின் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்ற பிறகு அவ்விருது வழங்கும் திட்டம் சில மாற்றங்களுடன் நடைமுறைக்கு வந்தது. அதில், விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசுக்கு மாற்றாக ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதில், முன்பே விருது வாங்கியவர்களுக்கும் ஓய்வூதியம் தொகை வழங்குவதா அறிவிக்கப்பட்டது. யஷ் பாரதி விருது பெற்றதன் காரணமாக அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக் பச்சன், மறைந்த அமிதாப்பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஆகிய 4 பேருக்கும் தலா 50,000 ரூபாய் ஓய்வூதியம் தொகை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்ட அமிதாப்பச்சன், ” யஷ் பாரதி விருது பெற்றுள்ள என் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம் வழங்கும் உத்தரப் பிரதேச அரசின் முடிவுவை மதிக்கிறேன். என் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ள ஓய்வூதியத் தொகை அனைத்தையும் ஏழை , எளிய மக்களுக்கு உதவும் நல்ல திட்டத்திற்கு அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இது தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தனியாக கடிதம் எழுத உள்ளேன் ” எனத் தெரிவித்ததாக 2015-ல் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, கலைச் சேவைக்காக நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தின் உத்தரப் பிரதேச அரசு ஓய்வூதியத் தொகையாக மாதம் 2 லட்சம் வழங்குவதாக அறிவித்தது 2015-ம் ஆண்டில், தற்போது இல்லை.
யஷ் பாரதி விருது பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தால் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. எனினும், அந்த ஓய்வூதியத் தொகையை அமிதாப்பச்சன் ஏற்க மறுத்து, அதை ஏழை மக்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு கூறி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதையெல்லாம் அறியாமல், தவறான மீம் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சிலர், அமிதாப்பச்சன் குடும்பம் என்பதால் ஐஸ்வர்யா ராய்க்கும் ஓய்வூதியம் வழங்க அறிவிக்கப்பட்டு உள்ளதாக தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.