தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக கூறிய அமித்ஷா..!

பரவிய செய்தி
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா கடந்த நான்கு ஆண்டுகளாக வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு மட்டுமே தமிழகத்திற்கு அதிக நிதியினை ஒதுக்கி வருவதாக என இடம்பெற்றுள்ளது அவரது பேச்சு.
மதிப்பீடு
சுருக்கம்
பாஜக நிதியை அதிகரித்து வழங்கி வருகிறது என்றுக் கூறுவதே தவறு. மாநிலங்களுக்கான நிதி வழங்கல் 14-வது நிதி ஆணையத்தின் படியே அதிகரிக்கும். தனிப்பட்ட கட்சியின் பெயரால் எடுத்துக் கூடுவது முற்றிலும் தவறு.
விளக்கம்
சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜகவின் ஆட்சியில் தான் தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்படுவதாகவும், முந்தைய ஆட்சியில் இல்லாத அளவிற்கு நிதிகள் ஒதுக்கி வருவதாகவும் பேசி உள்ளார். அதில், முரண்பட்ட தகவல்கள் உள்ளதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
14-வது நிதி ஆணையம் :
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 13-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு 94,540 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், பாஜகவின் நான்கு ஆண்டு ஆட்சியில் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 1 லட்சத்து 96 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக ஓர் தகவலை அளித்தார்.
14-வது நிதி ஆணையம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையில் ஜனவரி 2, 2013-ல் அமைக்கப்பட்டு 2014 டிசம்பர் 15-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆக, இந்த நிதி ஆணையம் அமைக்கப்பட்டது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்பது தெளிவாகிறது.
மாநிலங்கள் செலுத்தும் வரித் தொகுப்பில் 32 சதவீதத்தை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பது 13-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை. இதன் அடுத்தக்கட்டமாக 14-வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை 42 சதவீதமாக உயர்த்தியது. இதனால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி அளவு அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் 14-வது நிதி ஆணையமே தவிர கட்சி அல்ல.
குறையும் நிதி :
தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியின் அளவு முந்தைய ஆணையம் வழங்கி வந்த அளவோடு ஒப்பீடு செய்தால் 19 சதவீதம் குறைந்து உள்ளது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. முந்தைய நிதி ஆணையம் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால், 14-வது நிதி ஆணையம் 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிறகு முக்கியத்துவம் அளிக்கிறது.
இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி வரும் தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு பின்னடைவு மட்டுமே. 14-வது நிதி ஆணையத்தால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 6 ஆயிரம் கோடி கிடைக்கவில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“ இதையே 2015-ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதியக் கடிதத்தில், “ நிதி குழுவின் புதிய பரிந்துரையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியில் 19. 14 குறைந்து, வருடத்திற்கு 6,000 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்து இருந்தார் ”.
வறட்சி நிதி :
2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த வறட்சியின் போது 1,750 கோடி மற்றும் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பிறகு இழப்பீடாக 256 கோடி வழங்கியதாக அமித் ஷா கூறினார்.
ஆனால், வறட்சி மற்றும் புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கோரிய தொகையில் 3.24 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி உதவி:
தஞ்சை, நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்காக நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்து இருந்தார் அமித் ஷா.
” 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடெங்கிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பிரதான் மந்திரி ஸ்வஸ்தீய சுரஷா யோஜனா என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 4 மருத்துவக்கல்லூரிகள் பயன்பெற்றுள்ளன. இது ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளது “.
நிதி ஆயோக் உருவாக்கப்பட்டு திட்டக் குழு கலைக்கப்பட்டதால் ஏற்கனவே திட்டக்குழு நிதி உதவியுடன் செயல்படுத்தி வந்த திட்டங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைந்து வருகிறது என்று கருத்து நிலவி வருகையில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை பாஜக கட்சி செய்வதாக அமித் ஷா கூறுவது எவ்விதத்தில் சரியான தகவலாகும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.