தமிழக எம்.பிக்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு சறுக்கல் !

பரவிய செய்தி
தமிழ்நாட்டு எம்.பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த தர வரிசையில் அதிமுக எம்.பி சத்யபாமா முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் இறுதி இடத்திலும் உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
PRS legislative Research-ல் தமிழக எம்பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகளில், எம்.பி சத்யபாமா 87% வருகைப்பதிவு உடன் முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் 46% வருகைப் பதிவுடன் இறுதி இடத்திலும் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழக எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78% மட்டுமே.
விளக்கம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொண்டு விவாதிக்க வேண்டும், கேள்விகள் எழுப்ப வேண்டும்.
மாநில வாரியாக இந்திய எம்பிக்களின் நாடாளுமன்ற வருகைப் பதிவு மற்றும் எந்தெந்த விவாதங்களில் பங்கு கொண்டனர், எதற்கெல்லாம் கேள்விகள் எழுப்பினார்கள் உள்ளிட்டவை அடங்கிய முழு விவரத்தையும் PRS legislative Research-ல் வெளியிடப்பட்டது.
இத்தகைய தகவலில் தமிழகத்தின் 39 எம்பிக்களில் குறைவான வருகைப் பதிவைக் கொண்டது பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆவார். அன்புமணி அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 46% மட்டுமே.
2014-ல் இருந்து இன்றுவரை அன்புமணி எம்.பி நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சனை, விவசாயம் சார்ந்த முன்னேற்றம், மீனவர் பிரச்சனை, மது உள்ளிட்ட 12 விவாதங்களில் பங்கேற்று உள்ளார். மொத்தம் 50 கேள்விகளை எழுப்பி உள்ளார். 2018-ல் நீட் தொடர்பான விவாதத்தில் மட்டுமே கலந்து கொண்டதாக PRS ஆய்வில் தெரிகிறது.
தமிழக எம்.பிக்களின் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் திருப்பூர் எம்.பி சத்யபாமா 87 சதவீத வருகைப்பதிவையும், 119 விவாதங்களில் கலந்து கொண்டு 412 கேள்விகளை எழுப்பியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட 90 சதவீத வருகைப்பதிவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 80 சதவீதம். தமிழக எம்பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78 % , விவாதங்கள் 43.6%, 404 கேள்விகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“ பொதுவாக, விவாதங்களில் பங்கு கொள்வது மற்றும் கேள்விகள் எழுப்புவதால் மட்டுமே தொகுதிகளில் சிறப்பான பணிகளை செய்கிறார்கள் என நினைத்து எம்.பிக்களின் செயல்திறனை முடிவு செய்ய முடியாது. அதேநேரத்தில், நாடாளுமன்ற கூட்டங்களிலும் எம்பிக்கள் பங்கேற்க வேண்டியதும் அவசியம் “ என Association of Democratic Reforms நிறுவனர் ஜக்தீப் சோக்கர் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். இதில், சராசரியை விட குறைந்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. மக்களுக்கான பணியினை சிறப்பாக செய்தல் என்பதே தலையாய கடமையாகும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.