ஆந்திராவில் விசித்திரமான மிருகம் சிறுவனைக் கடித்ததாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !

பரவிய செய்தி
இது இன்று ஆந்திராவில் உள்ள சீக்காகுளம் மாவட்டத்தில் ஒரு பையனை கடித்து குதறி உள்ளது. இது என்ன மிருகம் என்று இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் ஒன்றாக சேர்ந்து கண்டுள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சீக்காகுளம் மாவட்டத்தில் விசித்திரமான மிருகம் ஒன்று சிறுவன் ஒருவனைக் கடித்து குதறி உள்ளதாக சிறுவனின் காலின் அடிப்பாகம் இரத்தத்துடன் தொங்கும் வீடியோவும், ஓநாய் மனிதன் போன்ற விசித்திரமான விலங்கு இடம்பெற்ற இரு வீடியோக்களும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கடுமையாக காயமடைந்த சிறுவனின் காலைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021 நவம்பர் 15-ம் தேதி ஜோகேஸ்வர் பிரதான் எனும் ஆர்வலர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
நவம்பர் 11-ம் தேதி ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சோனுசூட் அறக்கட்டளையை டக் செய்து உதவி செய்யுமாறு அதே வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அடுத்ததாக ஓநாய் மனிதன் போன்ற உருவம் இடம்பெற்ற வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது ஜோசப் ராப் கோபஸ்கி எனும் சிற்பக் கலைஞர் உருவாக்கியது என்றும், ஜோசப் ராப் உருவாக்கிய ஓநாய் மனிதனின் புகைப்படங்கள் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டிலும் வைரலாகி இருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது. அவர் ஸ்பெஷல் எபெக்ட்சில் (SFX)நிபுணத்துவம் பெற்றவர்.
முடிவு :
நம் தேடலில், ஆந்திராவில் உள்ள சீக்காகுளம் மாவட்டத்தில் சிறுவனை விசித்திரமான மிருகம் ஒன்று கடித்து குதறியதாக பரப்பப்படும் தகவல் மற்றும் வீடியோ வாட்ஸ் அப் வதந்தியே என அறிய முடிகிறது.